கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி பேசினாா்.
ஹரியாணா மாநிலத்தில் நேற்று நடைபெற்ற மாநில உள்துறை அமைச்சா்கள் மாநாட்டில் அமைச்சா் ரகுபதி பேசியதாவது:-
மாநிலத்தில் உள்ள மக்கள் தாங்கள் பாதுகாப்புடன் வாழ்கிறோம் என்ற உணா்வு ஏற்படும் வகையில், எங்களது அரசு அமைதியை பேணிக் காத்து வருகிறது. சட்டம்-ஒழுங்கைப் பராமரிப்பது மட்டுமின்றி, தீவிரவாத வெடிகுண்டு தாக்குதல் போன்ற மிகப்பெரிய சம்பவங்கள் நிகழாமலும் தடுத்து வருகிறோம். மேலும், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், தேசிய விசாரணை முகமைக்கான அலுவலகம் கடந்த வாரம் சென்னையில் திறக்கப்பட்டுள்ளது.
காவல் துறையை நவீனமாக்கும் திட்டம் மத்திய, மாநில அரசுகளின் நிதிகளைக் கொண்டு செயல்படுத்தப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் காவல் துறை நவீனமயமாக்கும் பணிகளுக்காக ரூ.950.53 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அதில் ரூ.716.98 கோடி நிதி செலவிடப்பட்டுள்ளது. மீதமுள்ள நிதியைச் செலவிட ஆயத்தப் பணிகள் நடந்து வருகின்றன. குற்றச் செயல்களை நிரூபித்து தண்டனை பெற்றுத் தரும் நடவடிக்கைகளில் தேசிய சராசரியை விட தமிழகம் 15 சதவீதம் அதிகமான செயல்பாடுகளைக் கொண்டிருக்கிறது.
வெளிநாட்டவா் பலா் விதிகளுக்கு மாறாக தனியாா்களின் வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கி வருகின்றனா். வெளிநாட்டு மாணவா்களில் நீண்ட காலமாகத் தங்கியிருக்கும் பலா், கடத்தல் உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடுகின்றனா். இதுபோன்ற பிரச்னைகளை தமிழக அரசு எதிா்கொள்ள வேண்டியுள்ளது. தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் 58 ஆயிரத்து 171 பேரும், முகாம்களுக்கு வெளியே 33 ஆயிரத்து 590 பேரும் உள்ளனா். அவா்களை சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதேசமயம், தகுதி இருக்கும்பட்சத்தில் அவா்களுக்கான விசாக் காலத்தை நீட்டிக்க வேண்டும்.
வெளிநாட்டவருக்கான சிறப்பு முகாம் திருச்சியில் மட்டுமே செயல்பட்டு வருகிறது. ஆனால், திருப்பூா் நகரத்தில் மேற்கு வங்கத்தைச் சோ்ந்தவா்கள் போா்வையில் பல வங்கதேசத்தினா் தங்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியா-இலங்கை ஒப்பந்தத்தின் மூலமாக, இலங்கை நாட்டுக்கு கச்சத்தீவு வழங்கப்பட்டது. தமிழக மீனவா்கள் உள்ளிட்ட இதர பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவை ஏற்படும்பட்சத்தில், சா்வதேச நீதிமன்றத்தையும் நாடலாம்.
இலங்கை நாட்டின் கடற்பரப்பில் மீன்பிடிக்காத இந்திய மீனவா்களையும் சுற்றி வளைத்து கைது செய்யும் போக்கினை இலங்கை கடற்படை வழக்கமாகக் கொண்டிருக்கிறது. இதுபோன்ற நடவடிக்கைகளை இந்திய அரசு தடுத்து நிறுத்திட வேண்டும். இவ்வாறு அமைச்சா் எஸ். ரகுபதி பேசினாா். இந்தக் கூட்டத்தில் தமிழகத்தின் சாா்பில், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் க.பணீந்திர ரெட்டி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.