தேவர் ஜெயந்தி விழாவையொட்டி முத்துராமலிங்க தேவரின் உருவப்படத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா, 60-வது குருபூஜை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட்டு வருகிறது. தேவர் குருபூஜை விழாவையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் அவரது உருவ படத்திற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தேவர் குருபூஜை விழாவையொட்டி, சென்னை, கிண்டி கவர்னர் மாளிகையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முத்துராமலிங்க தேவரின் உருவப்படத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் புரட்சிகர சுதந்திரப் போராட்ட வீரர், தொலைநோக்கு தேசியவாதி, ஆன்மீக தலைவர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி. அவரது வாழ்க்கை தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும்” என்று கூறப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
கொடுங்கோல் சட்டத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டியவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் நேதாஜியின் கரத்தை வலுப்படுத்தியவர். “தென்னகத்து போஸ்” ஐயா பசும்பொன் திருமகனார் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் தீரத்தையும், தியாகத்தையும், நற்பணிகளையும் நன்றியோடு நினைவுகூர்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.