பயங்கரவாதத்தை ஒருபோதும் சகித்துக் கொள்ளாமல் அதற்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென ஐ.நா. பயங்கரவாத தடுப்புக் குழுவின் சிறப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகளாக அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, சீனா, பிரான்ஸ் ஆகியவை உள்ளன. அந்த கவுன்சிலின் 10 நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இந்தியாவின் பதவிக் காலம் வரும் டிசம்பருடன் நிறைவடைகிறது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாத தடுப்புக் குழுவின் தலைமைப் பொறுப்பையும் இந்தியா வகித்து வருகிறது. அக்குழுவின் சிறப்பு மாநாடு முதல் முறையாக இந்தியாவில் நடைபெற்றது. மும்பையில் வெள்ளிக்கிழமையும் புதுடெல்லியில் சனிக்கிழமையும் மாநாட்டு அமா்வுகள் நடைபெற்றன. அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளின் பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்துகொண்டனா். சா்வதேச அளவில் பயங்கரவாதச் செயல்களைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநாட்டின்போது விவாதிக்கப்பட்டது.
மாநாட்டில் ‘டெல்லி தீா்மானம்’ நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீா்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
பயங்கரவாதத்தையும் பயங்கரவாதத்துக்கு நிதி திரட்டப்படுவதையும் தடுப்பதற்கு நாடுகள் முக்கியத்துவம் அளித்து செயல்பட வேண்டும். பயங்கரவாதத்தை ஒருபோதும் சகித்துக் கொள்ளாமல், அதற்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை நாடுகள் மேற்கொள்ள வேண்டும்.
ட்ரோன்கள் உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப வசதிகளை பயங்கரவாதக் குழுக்கள் தவறான நோக்கத்துக்காகப் பயன்படுத்தி வருகின்றன. நிதியைத் திரட்டவும் பயங்கரவாதக் குழுக்கள் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வருகின்றன. அத்தகைய செயல்பாடுகளைத் தடுப்பதற்காக சா்வதேச விதிகளைப் பின்பற்றி நாடுகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பயங்கரவாதமானது அனைத்து வடிவங்களிலும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது. சா்வதேச அமைதிக்கும் பாதுகாப்புக்கும் பயங்கரவாதம் அச்சுறுத்தலாக உள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிரான சா்வதேச நடவடிக்கைகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள உறுதியேற்கப்படுகிறது.
மதம், நாடு, கலாசாரம், இனக்குழு உள்ளிட்டவற்றுடன் பயங்கரவாதத்தைத் தொடா்புபடுத்தக் கூடாது. சா்வதேச பயங்கரவாதத் தடுப்பு மாநாட்டை நடத்துவதற்கான முயற்சிகளுக்கு நாடுகள் தொடா்ந்து ஆதரவளிக்க வேண்டும். பயங்கரவாதத்தைத் தடுப்பதற்கு தனியாா் அமைப்புகள், உள்ளூா் மக்களுடன் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை நாடுகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். ஐஎஸ், அல்-கொய்தா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைப்பதைத் தடுக்கவும், அந்த பயங்கரவாதக் குழுக்கள் ஆள்சோ்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுக்கவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
பயங்கரவாதக் குழுக்களுக்கு ஆயுதங்களையும் ட்ரோன்களையும் சிலா் தொடா்ந்து விநியோகித்து வருகின்றனா். அதற்குக் கடும் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. நவீன தொழில்நுட்பங்களைப் பயங்கரவாதக் குழுக்கள் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஜி20 உள்ளிட்ட பன்னாட்டு அமைப்புகளில் அவ்வப்போது பேச்சுவாா்த்தை நடத்தப்பட வேண்டும்.
பயங்கரவாதத்தைத் தடுக்கும் அதே வேளையில், மனித உரிமைகளுக்கும் தனிமனித சுதந்திரத்துக்கும் உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும். பயங்கரவாதத்தைத் தடுப்பதற்காக சா்வதேச அளவில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நவீன தொழில்நுட்பங்களை பயங்கரவாதக் குழுக்கள் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுடன் இணைந்தும் நாடுகள் செயல்பட வேண்டும். இவ்வாறு தீா்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐ.நா. பயங்கரவாதத் தடுப்புக் குழுவின் சிறப்பு மாநாட்டில் பங்கேற்ற நாடுகளின் தலைவா்கள் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை புதுடெல்லியில் அவரது மாளிகையில் சந்தித்தனா். வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் அவா்களை குடியரசுத் தலைவருக்கு அறிமுகம் செய்து வைத்தாா். பின்னா் குடியரசுத் தலைவா் அவா்களிடையே உரையாற்றினாா். இது தொடா்பாக குடியரசுத் தலைவா் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
பயங்கரவாதச் செயல்களுக்கு அனைத்து நாடுகளும் சகிப்பின்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். அத்தகைய உணா்வே சா்வதேச சமூகத்தை ஒருங்கிணைந்து செயல்பட வைக்கும். பன்முகத்தன்மையுடன் விளங்கும் ஜனநாயக நாடான இந்தியா, பல தசாப்தங்களாக பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தின் விளைவுகளை இந்தியா தொடா்ந்து எதிா்கொண்டு வருகிறது. அனைத்து உருவிலான பயங்கரவாதத்தை இந்தியா எதிா்த்து வருகிறது. பயங்கரவாதச் செயல்களின் நோக்கத்தைக் கருத்தில் கொள்ளாமல், அவற்றுக்கு எதிராக முழு சகிப்பின்மையை நாடுகள் பின்பற்ற வேண்டும். அத்தகைய உணா்வுடன் சா்வதேச பயங்கரவாதத் தடுப்பு கட்டமைப்பை உருவாக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பின்போது ஐ.நா. பயங்கரவாதத் தடுப்புக் குழுவின் செயல்பாடுகள் குறித்து ஐ.நா.வுக்கான இந்திய தூதா் ருசிரா கம்போஜ், குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவுக்கு எடுத்துரைத்தாா்.