நீதித் துறை, அதிகாரத்துவம் மற்றும் ஊடகங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின்றன என, ராகுல் காந்தி கூறினார். தெரிவித்து உள்ளார்.
காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை அக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, ‘பாரத் ஜோடோ யாத்திரை’ என்னும் இந்திய ஒற்றுமை யாத்திரையை மேற்கொள்கிறார். தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திராவை தொடர்ந்து கடந்த 23 ஆம் தேதி தெலங்கானா மாநிலத்தில் நடைபயணம் தொடர்ந்து வருகிறார். இந்திய ஒற்றுமை பயணத்திற்கு இடையே, ரங்காரெட்டியில் இன்று, செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி கூறியதாவது:-
குஜராத் மாநிலம் மோர்பியில் தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்தை அரசியல் ஆக்க விரும்பவில்லை. அங்கு ஏராளமான அப்பாவி பொது மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த நேரத்தில் இதில் அரசியல் பேசுவது நல்லதல்ல. பல்வேறு அமைப்புகள் மீது முறையான தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. நீதித் துறை, அதிகாரத்துவம் மற்றும் ஊடகங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், இந்த அமைப்புகள், ஆர்எஸ்எஸ் பிடியில் இருந்து விடுவிக்கப்படுவதையும், இந்த அமைப்புகளில் சுதந்திரம் பேணப்படுவதையும் உறுதி செய்வோம்.
எங்கள் கட்சி ஒரு ஜனநாயக கட்சி. நாங்கள் சர்வாதிகாரத்தை நடத்தவில்லை என்பது எங்கள் டிஎன்ஏவில் உள்ளது. சமீபத்தில், எங்கள் கட்சியின் தலைவர் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆர்எஸ்எஸ், பாஜக, டிஆர்எஸ் மற்றும் பிற அரசியல் கட்சிகள் எப்போது தேர்தல் நடத்தும் என்று நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே எந்த உறவும் இல்லை. மேலும், அந்தக் கட்சியுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், தேசியக் கட்சியை நடத்துவதாக அவர் நம்பினால் நடத்தட்டும். அவர் சர்வதேச கட்சியை உருவாக்க விரும்பினால் உருவாக்கட்டும். அது அமெரிக்காவிலோ அல்லது சீனாவிலோ அல்லது பிற நாடுகளிலோ தேர்தலில் போட்டியிடலாம். அதை நாங்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறோம். நிதிஷ் குமாருடன், கே.சந்திரசேகர் ராவ் பேசினால் அதில் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.