அறநிலையத்துறை செயல்பாடுகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி முக்கியமான கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.
கோவில்களில் இருந்து அறநிலையத்துறை வெளியேறவேண்டும் என்று வலதுசாரி அமைப்புகள் சில கோரிக்கைகள் வைத்து வருகின்றன. பாஜக கட்சியை சேர்ந்தவர்கள் உட்பட கோவில் நிர்வாகத்தை விட்டு அரசு வெளியேற வேண்டும் என்று கோரிக்கைகள் வைத்து வருகின்றன. ஆனால் கோவிலில் சமத்துவம் நிலவ, அனைத்து சாதியினரும் சமமாக நடத்தப்பட, முறைகேடுகள் நடக்காமல் இருக்க அரசு இதில் தலையிட்டால்தான் சரியாக இருக்கும். அறநிலையத்துறை கோவில்களை கட்டுப்படுத்தினால்தான் சரியாக இருக்கும் என்றும் வாதங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. அறநிலையத்துறை கலைக்க வேண்டும், கோவில்களை அரசு கட்டுப்படுத்த கூடாது என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமியும் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.
இந்தநிலையில்தான் முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் கூறியுள்ளதாவது:-
தம்பரம் நடராஜர் கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லை. இதை கட்டுப்பாட்டில் எடுப்பது தொடர்பான வழக்கில் 2014 ஜனவரி 6ம் தேதி உச்ச நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பு வழங்கியது. அதில், இரண்டு முக்கியமான விஷயங்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சிதம்பரம் பொது தீட்சிதர்கள், ‘சீர்மரபினர்’ என்று சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது சரிதான் என்று உறுதி செய்தது. அதை மாற்றுவதற்கு இடமே இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது, இந்த கோவிலை தீட்சிதர்கள் பல நுாற்றாண்டுகளாக நடத்தி வருகின்றனர். கோவில் நன்றாக இருக்கிறது. கோவிலில் எந்த சீர்கேடும் இல்லை. அப்படி இருக்கும் போது அதை அறநிலையத்துறை கையில் எடுக்க முடியாது. நிர்வாகத்தில் பிரச்சனை இருந்தால் மட்டுமே அறநிலையத்துறை கோவிலை கையில் எடுக்க முடியும். அப்படியே தவறு இருந்தாலும், அறநிலையத்துறை மொத்தமாக கோவிலை கட்டுப்படுத்த முடியாது. நிர்வாக தவறுகளை சரி செய்த பின் அதை மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
அறநிலையத் துறைச் சட்டப் பிரிவு 45 என்ன சொல்கிறது என்றால், நியமனம் விதிகள் இயற்றப்படவில்லை என்றால் செயல் அலுவலர் நியமனம் செல்லாது. அதேபோல் செயல் அலுவலர் ஏன் நியமிக்கப்படுகிறார் என்றும் சொல்ல வேண்டும். இல்லையென்றால் அந்த உத்தரவும் செல்லாது. வைத்தீஸ்வரன் கோவில் வழக்கில் உச்ச நீதிமன்றம் 1965ல் இதே உத்தரவை பிறப்பித்துள்ளது. இப்படி செயல் அலுவலர் நியமிக்கப்பட்டாலும், சில காலத்திற்கு மட்டுமே அவர் செயல்பட முடியும். நிரந்தரமாக ஒரு செயல் அலுவலர் கோவிலை கட்டுப்படுத்த முடியாது. இதன் அடிப்படையில்தான் 2014ல் சிதம்பரம் கோவில் வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
இந்த தீர்ப்புகளை தமிழ்நாடு அரசு மதிக்க வேண்டும். உச்ச நீதிமன்ற விதிப்படி அரசுகள் செயல்பட வேண்டும் என்ற விதி இருக்கிறது. அரசியல் சாசன சட்ட பிரிவு இதைத்தான் சொல்கிறது. இந்த தீர்ப்புகள் அடிப்படையிலும், அரசியல் சாசன விதிகள், 25, 26ன் படியும் கோவில் நிர்வாகத்தில் அரசு தலையிட கூடாது. கோவில் நிர்வாகத்தில் இருந்து அரசு வெளியேற வேண்டும். தமிழ்நாடு கோவில்களில் இருந்து அறநிலையத்துறை வெளியேற வேண்டும். இல்லையென்றால் அது உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரானதாக கருதப்படும். நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும். இவ்வாறு சுப்பிரமணியன் சாமி கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.