சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடும் மொழியாக தமிழ் நிச்சயம் இடம்பெறும் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறினார்.
சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின்12வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியுள்ளதாவது:-
பொதுமக்கள் நீதித்துறையை எளிதாக அணுகுவதற்கு, பிராந்திய மொழிகளில் நீதிமன்ற நடவடிக்கைகள் இருப்பது காலத்தின் கட்டாயம். நமது பிரதமர் நமது கலாச்சாரம் மற்றும் நமது மொழியுடன் நாட்டை முன்னேற்ற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார் என்பது உங்களுக்குத் தெரியும். நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் நீதித்துறையில் எதிர்காலத்தில் பிராந்திய மொழிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் மற்றும் அனைத்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளிடமும் ஏற்கனவே நான் பேசியுள்ளேன். உயர்நீதிமன்றம் மற்றும் அனைத்து மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்களில் (எதிர்காலத்தில்) தமிழ் மொழி முக்கிய இடம் பெறுவதைக் கண்டு நாம் அனைவரும் பெருமைப்படுவோம். தமிழ் மிகச் சிறந்த மொழி, ஒரு மொழியை மட்டும் திணிப்பதை நான் எதிர்க்கிறேன். உள்ளூர் மொழிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-
விரைவான நீதிவழங்கல் முறையை உறுதிப்படுத்துவதே பண்பட்ட, முன்னேறிய சமூகத்தின் குறிக்கோளாக இருக்க வேண்டும். காசிக்கும் தமிழ்நாட்டிற்குமான தொடர்பை ஆங்கிலேயர்கள் சிதைத்தனர். அதனை தற்போது மீட்டெக்கும் வகையில், காசியில் தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. தமிழகத்திலிருந்து தோன்றிய சாதுக்கள் மற்றும் முனிவர்கள், பல நூறு ஆண்டுகளாக இந்தியாவில் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு தீர்வை வழங்கி உள்ளனர். இந்திய நாட்டின் தோற்றத்திற்கு, கலாச்சார பெருமை வாய்ந்த தமிழ்நாடு, மிகப்பெரிய பங்களிப்பை தந்துள்ளது. மோடி போன்ற வலிமையான தலைவர் இருப்பதால், இந்தியா மிகப்பெரும் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனை குலைப்பதற்கு மொழி, இனம், மதம், சாதி என்கிற பெயரில் தொந்தரவுகள் வரக்கூடும். அதனை நாம் கவனமுடன் எதிர்கொண்டு வளர்ச்சி பாதையில் செல்ல வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.