அதிமுகவில் இருந்து விலகுவதாக கோவை செல்வராஜ் அறிவிப்பு!

அதிமுகவில் இருந்து இருந்து விலகுவதாக ஓ.பன்னீர்செல்வத்தின் அணியைச் சேர்ந்த கோவை செல்வராஜ் அறிவித்துள்ளார்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான சர்ச்சைகள் சமீபகாலமாக தீவிரமடைந்து வருகின்றன. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளது. இதன் காரணமாக அதிமுக ஓ.பன்னீர்செல்வம் அணி, எடப்பாடி பழனிசாமி அணி என இரண்டாக பிரிந்துள்ளது. இந்த நிலையில் அதிமுகவில் இருந்து இருந்து விலகுவதாக ஓ.பன்னீர்செல்வத்தின் அணியைச் சேர்ந்த கோவை செல்வராஜ் அறிவித்துள்ளார். அதிமுகவில் தொடர்ந்து செயல்பட வேண்டாம் என முடிவுவெடுத்துள்ளேன். அதேசமயம் திராவிட பாரம்பரியத்தை விட்டு விலகமாட்டேன், நல்ல முடிவு விரைவில் எடுப்பேன், ஒருநாளும் அரசியலை விட்டு விலகமாட்டேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து கோவை செல்வராஜ்
விலக்கப்படுவதாகவும், இதுவரை 3 மாவட்டங்களாக இருந்த கோவை அதிமுக 4 அமைப்பு மாவட்டங்களாக செயல்பட அனுமதிக்கப்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை மாநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து கோவை கே.செல்வராஜ் விடுவிக்கப்படுகிறார். கோவையில் நிர்வாக வசதியை முன்னிட்டு இதுவரை 3 பிரிவாக செயல்பட்டு வந்த மாவட்டங்கள், கோவை மாநகர், கோவை மாநகர் வடக்கு, கோவை புறநகர் தெற்கு, கோவை புறநகர் வடக்கு என 4 மாவட்டங்களாக செயல்பட அனுமதிக்கப்படுகிறது. அதன்படி, கோவை மாநகர் மாவட்ட செயலாளராக டி.மோகன், கோவை மாநகர் வடக்கு மாவட்ட செயலாளராக எல்.இளங்கோ, கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக எம்.மணிமாறன், கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளராக பி.ராஜேந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கட்சி தொண்டர்கள் அனைவரும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட செயலாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.