மசோதாவுக்கு உடனேயே கவர்னர் கையெழுத்து போட்டு தான் ஆக வேண்டும் என்று இல்லை: தமிழிசை

ஆளுனர் என்றாலே எந்தவித சந்தேகமும் படாமல் மசோதாவுக்கு உடனே கையெழுத்து போட வேண்டும் என்று இல்லை என்று தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

தென்காசியில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்தார். அப்போது தனக்கு காவல்துறையினர் வழங்கிய மரியாதையை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து தன்னை வரவேற்க வந்திருந்த பொது மக்களிடம் சென்று சிறிது நேரம் தமிழிசை சவுந்திரராஜன் கலந்துரையாடினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

ஜி 20 மாநாட்டிற்கு இந்தியா தலைமை தாங்குவது பெருமைக்குரிய விசயம். வரும் 9 ஆம் தேதி அனைத்து மாநில முதலமைச்சர்கள் மற்றும் ஆளுநர்களுடன் பிரதமர் மோடி காணொளி மூலம் உரையாடுகின்றார். அதற்கு அழைப்பு வந்துள்ளது. விவேகானந்தர் உலகத்தின் குருவாக பாரதம் இருக்க வேண்டும் என்று நினைத்தாரோ, அதே போல இன்று நாம் ஒரு முன்னேற்றமான பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். அதற்காக நாம் பிரதமருக்கு நன்றி சொல்ல வேண்டும். அதுமட்டுமல்ல, தற்போது மூக்கில் சொட்டு மருந்து தடுப்பூசி தமிழகத்தை சேர்ந்த பயோடெக் நிறுவனம் சார்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தற்போதும் பொது முடக்கம் உள்ளது. கொரோனா தொற்றுகள் அதிகரித்து வருகிறது. இவை அனைத்தில் இருந்தும் நாம் தப்பிக்க தடுப்பூசி தான் காரணம். இதற்காக அதற்கு ஏற்பாடு செய்த பிரதமர் மோடி மற்றும் மாநில அரசுகள், ஏற்றுக்கொண்ட மக்களால் தான் நாம் பாதுகாப்பாக இருக்கிறோம்.

ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் சட்ட மசோதா நிறைவேற்ற முடியாதற்கு ஆளுநர் சில காரணங்கள் தெரிவித்துள்ளார். ஆளுநர்களுக்கு வரக்கூடிய மசோதாக்களை உடனே கையெழுத்திட வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதில் சில சந்தேகங்கள் இருந்தால் அது தொடர்பாக ஆலோசனைகளை கேட்டுக்கொள்ள நேரம் எடுப்பது தவறில்லை. அவர்கள் அமைச்சரை அழைத்து சில விளக்கங்களை கேட்டிருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டேன். விளக்கம் கிடைத்ததும் அவர் அதற்கான முடிவு எடுக்கலாம். ஆன்லைன் ரம்மி விசயம் தொடர்பான மசோதாவில் கையெழுத்து போடாமல் ஏன் வைத்துள்ளார் என்பது குறித்து நான் சொல்ல முடியாது.

ஒவ்வொரு கருத்து வேற்றுமைக்கும் ஆளுநர்களை திரும்ப பெற வேண்டும் என்று சொல்வது சரியான நடவடிக்கையாக இருக்காது என்பது எனது தாழ்மையான கருத்து. நான் இப்போது தமிழக ஆளுநருக்கு ஆதரவாக பேசுவதை வைத்து, ‘நீ என்ன அவருக்கு வக்காலத்து வாங்குவது’ என்று சோசியல் மீடியாவில் ஆரம்பித்து விடுவார்கள். அதுபற்றி எனக்கு கவலை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.