ஜல்லிகட்டு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல்!

ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்கக் கோரி பீட்டா உள்ளிட்ட 15 அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஜல்லிகட்டி போட்டிகள் எப்படி நடக்கும் என்பது தொடர்பாக தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக மக்கள் ஆர்வத்துடன் ஜல்லிக்கட்டு போட்டிகளை எதிர்பார்த்து வரும் நிலையில் தமிழகத்தின் அடையாளமாக உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளை தடை செய்ய வேண்டும் என பீட்டா உள்ளிட்டா 15 அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன. தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகளை கொடுமைப்படுத்தும் நிகழ்வுகள் நடைபெற்று வருவதாகவும் உரிய விதிமுறைகளை பின்பற்றாததால் அதனை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விசாரணையின் போது விலங்குகள் நல வாரியம், பீட்டா உள்ளிட்ட மனுதாரர்கள் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் கடுமையான வாதங்களோடு, புகைப்பட ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதே நேரத்தில் தடைகோரிய அமைப்புகளிடம், திரைப்படங்களில் விலங்குகள் பயன்படுத்தப்படுகிறது. அவை காட்சிப்படுத்துவதற்கான விலங்குகளாக இருந்தாலும் இல்லை என்றாலும் அனுமதி பெற்று பயன்படுத்தப்படுகிறது. பீட்டா அதை உறுதி செய்வதற்கான சட்டங்களாக எவை உள்ளது? இத்தகைய விஷயங்களுக்காக மட்டும் தான் அந்த விலங்குகள் பயன்படுத்தப்பட வேண்டும் உள்ளிட்டவை எல்லாம் வகுக்கப்பட்டிருக்கிறதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதனையடுத்து வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், “ஜல்லிக்கட்டு என்பது மாவட்ட ஆட்சியர் அனுமதியளித்த பின்னரே நடத்தப்படுகிறது. ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதியை காவல்துறை, தீயணைப்புத்துறை, பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை, உள்ளிட்ட துறைகள் சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்வர். மாடுபிடி வீரர்கள் உரிய மருத்துவ பரிசோதனைக்கு பின்னர், உரிய தகுதி சான்றிதழ் சமர்பித்த பின்னரே ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். காளைகளை உரிய விலங்கு மருத்துவர் பரிசோதிப்பர். ஒன்றுக்கு மேற்பட்டோர் காளையை அடக்க முற்பட்டால் தகுதி நீக்கம் செய்யப்படுவர். காளை அரங்கினுள் இருந்து வெளியேறவில்லை என்றால் காளையின் உரிமையாளரை அழைத்து அதனை வெளியேற்ற நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறுவர். காளைகள் 15 மீட்டர் நீள ஜல்லிக்கட்டு அரங்கை தாண்டினால், காளையை பிடித்து செல்ல நீண்ட பாதை உள்ளது. அந்த பகுதியில் காளையின் உரிமையாளர் அதனை பிடித்து செல்வர். அங்கிருந்து காளைகளை அழைத்து சென்று அதற்கு உரிய தண்ணீர், உணவு, ஓய்வு வழங்கப்பட்டு வீட்டுக்கு அழைத்து செல்வர்.

குறைந்தது 18 மாதம் வயதான காளைகளே ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படும். காளைகளுக்கு சாராயம், மது, கண்களில் மிளகாய் பொடி தூவுதல் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட சட்ட விரோத செயல்கள் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து, தகுதி உள்ள காளைகள் மட்டுமே ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது. 50 சதுரமீட்டர் கொண்ட ஜல்லிக்கட்டு அரங்கில் ஒரு சமயத்தில் ஒரே ஒரு காளை மட்டுமே அவிழ்த்து விடப்படும். வாடிவாசலில் இருபுறம் மட்டுமே வீரர்கள் நிற்பர், காளை வரும் பாதையை மறைத்து எவரும் நிற்கமாட்டார். ஒரு சுற்றுக்கு, 25 வீரர்கள் மட்டுமே அரங்கிற்குள் காளையை அடக்க அனுமதிக்கப்படுவர்” என்பன உள்ளிட்ட பல விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.