லவ் ஜிகாத்துக்கு எதிராக மத்திய பிரதேசத்தில் கடுமையான சட்டம் கொண்டு வரப்படும் என்று அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
இந்து பெண்களை முஸ்லிம் ஆண்கள் திட்டமிட்டு தங்கள் காதல் வலையில் விழ வைத்து, அவர்களை மதமாற்றம் செய்வதாக பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. இதற்கு அவர்கள் ‘லவ் ஜிகாத்’ என பெயரும் வைத்துள்ளனர். இதனிடையே, கேரளா, மேற்கு வங்கம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இவ்வாறு லவ் ஜிகாத்தில் ஈடுபட்டதாக சில இளைஞர்கள் கைதும் செய்யப்பட்டுள்ளனர். இந்த லவ் ஜிகாத்துக்கு எதிராக மத்திய அரசு சட்டம் கொண்டு வர வேண்டும் என பாஜக மூத்த தலைவர்களும், மத்திய அமைச்சர்களும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் பழங்குடியின தலைவர் தந்தியா பில்லின் நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பேசியதாவது:-
ஒருகாலத்தில் பணம் கொடுத்தோ அல்லது மிரட்டியோ மதமாற்றம் செய்யப்பட்டு வந்தது. ஆனால், இப்போது கடுமையான சட்டங்கள் வந்துவிட்டதால் அதற்கு தற்போது வழி இல்லை. அதனால் இந்து பெண்களை காதலிப்பது போல நடித்து, சில கயவர்கள் அவர்களை மதமாற்றம் செய்கின்றனர். இனி மத்திய பிரதேசத்தில் லவ் ஜிகாத் என்ற சொல்லே ஒலிக்கக் கூடாது. ஒலிக்கவும் ஒலிக்காது. ஒருபுறம் மதமாற்றம் செய்வதற்காக லவ் ஜிகாத்தை பயன்படுத்துவது போல, பழங்குடியினர்களின் நிலங்களை அபகரிக்கவும் லவ் ஜிகாத் செய்யப்படுகிறது. பழங்குடி மக்களின் நிலங்களை அபகரிப்பதற்காகவே அந்த சமூக பெண்களை காதல் வலையில் வீழ்த்தி சிலர் திருமணம் செய்துகொள்கின்றனர். பின்னர், அந்த நிலத்தை தங்கள் பெயருக்கு மாற்றிக்கொண்டு, பழங்குடி பெண்களை துரத்தி விடுகின்றனர். இதுவும் ‘லவ் ஜிகாத்’ தான்.
டெல்லியில் ஒரு இந்துப் பெண்ணான சாரதாவை காதலித்த ஒரு முஸ்லிம் இளைஞர், அவரை 35 துண்டுகளாக வெட்டிக் கொலை செய்திருக்கிறார். இது லவ் ஜிகாத்தால் நடந்த கொலைதான் என்று நான் அடித்துக் கூறுகிறேன். எங்கள் மத்திய பிரதேச பெண்களுக்கு இதுபோன்ற கதி ஏற்பட நாங்கள் எந்தக் காலத்திலும் விட மாட்டோம். எனவே லல் ஜிகாத்துக்கு எதிராக மத்திய பிரதேசத்தில் கடுமையான சட்டம் கொண்டு வரப்படும். இனி லவ் ஜிகாத் என்ற விளையாட்டை மத்திய பிரதேசத்தில் யாரும் விளையாட முடியாது. அப்படி ஆட நினைத்தால் அவர்கள் அழிக்கப்படுவார்கள். இவ்வாறு சிவராஜ் சிங் சவுகான் கூறினார்.