சி.பி.ஐ. முன்பு ஆஜராக அவகாசம் கோரி கவிதா கடிதம்!

டெல்லி கோர்ட்டில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த அறிக்கையில், ரூ.100 கோடி லஞ்சம் கைமாறிய விவகாரத்தில் சந்திரசேகர ராவின் மகளும், எம்.எல்.சி.யுமான கவிதா பெயர் இடம்பெற்றது. இந்நிலையில் சி.பி.ஐ. முன்பு ஆஜராக அவகாசம் கோரி கவிதா கடிதம் எழுதியுள்ளார்.

டெல்லி ஆம் ஆத்மி அரசு தொடர்புடைய மதுபான கடை உரிம ஊழல் வழக்கில் தெலுங்கானா மாநில முதல்-மந்திரி சந்திரசேகர ராவின் மகளும், எம்.எல்.சி.யுமான கவிதாவுக்கு சம்பந்தம் இருப்பது தெரிய வந்தது. டெல்லி கோர்ட்டில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த அறிக்கையில், ரூ.100 கோடி லஞ்சம் கைமாறிய விவகாரத்தில் கவிதா பெயர் இடம்பெற்றது. 6-ந்தேதி (இன்று) காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு கவிதாவுக்கு சி.பி.ஐ. நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

இந்தநிலையில், விசாரணைக்கு ஆஜராக கவிதா கால அவகாசம் கோரியுள்ளார். அவர் சி.பி.ஐ.க்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:- முன்பே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகள் இருப்பதால், 6-ந் தேதி என்னால் ஆஜராக முடியாது. அதற்கு பதிலாக, 11, 12, 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் எது உங்களுக்கு வசதியானதோ, அந்த தேதியில் ஐதராபாத்தில் உள்ள எனது இல்லத்தில் விசாரணைக்கு ஆஜராக தயாராக இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.