அம்பேத்கரின் விசுவாசிகளாக பாஜகவினரை ஒருபோதும் ஏற்க முடியாது என்று மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.
சட்டமேதை அம்பேத்கரின் 66 வது நினைவு தினம் நேற்றைய தினம் அனுசரிக்கப்பட்டது.. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி நினைவை அனுசரித்தனர். தமிழக அரசியல் கட்சிகளும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அந்தவகையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் அம்பேத்கரின் உருவச்சிலை திறக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழக ஆளுநர் ரவி அம்பேத்கர் உருவச் சிலையை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மத்திய இணை அமைச்சர்கள் எல்.முருகன், அமைச்சர் கயல்விழி செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் எல்.முருகன் பேசியபோது, “அம்பேத்கரின் பெருமைகளை வெளியுலகத்திற்கு கொண்டு வந்ததே பாஜகதான். கடந்த 2014 இல் மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அம்பேத்கர் பிறந்த வீடு எங்கே இருக்கிறது என்பது கூட யாருக்கும் தெரியாமல் இருந்தது. அவரின் சிலை மூடி வைக்கப்பட்டிருப்பது தலைகுனிவு ஏற்படுத்தும் விஷயமாகும். பிரதமர் மோடி பதவி ஏற்கும் பொழுது அம்பேத்கரின் இந்திய அரசியலமைப்புச் சட்டம் தன்னுடைய புனித நூல் என்று சொல்லியே பதவியேற்றுக் கொண்டார். 2014-க்கு முன்பு அம்பேத்கர் பிறந்த வீடு என்பது இந்த உலகத்திற்கு தெரியாமல் இருந்தது. அண்ணல் அம்பேத்கருடைய 125 ஆவது பிறந்த தினத்தை நமது மத்திய அரசு கொண்டாடியது. அந்த நேரத்தில் அவர் பிறந்த இடம் மற்றும் அம்பேத்கர் டெல்லியில் மறைந்த இடம் என இந்த இரண்டு இடங்களையும் புனரமைத்து மிகப் பெரிய மெமோரியல் அமைத்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது. திருமுருகன் காந்தி அதேபோல் அம்பேத்கர் லண்டனில் படித்த வீடு, அதுவும் ஐடென்டிபிகேஷன் இல்லாமல் இருந்தது. அம்பேத்கர் மும்பையில் இருந்த இடம், அம்பேத்கர் தீட்சை எடுத்த நாக்பூர் என இந்த ஐந்து இடங்களையும் புனிதத் தலங்களாக அறிவித்து ஒரே வருடத்தில் மேம்படுத்தி இந்த நாட்டிற்கு அர்ப்பணித்த மாபெரும் தலைவர் மோடி” என்று பேசியிருந்தார்.
இந்நிலையில், அம்பேத்கரின் விசுவாசிகளாக பாஜகவினரை ஒருபோதும் ஏற்க முடியாது என்று மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார். சென்னை அடையாறில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் அவரது திருவுருவப்படத்திற்கு மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தியபிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
அரசியல் சாசனத்தை அனைவருக்கும் சமமானதாக மாற்றி காட்டியவர் அம்பேத்கர். ஆனால் இன்று பாஜக ஆட்சியில் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறது. குடியுரிமை ஒரு தரப்பினருக்கு மட்டுமே என்ற நிலை உருவாகி இருக்கிறது. இட ஒதுக்கீடு பொருளாதார அடிப்படையில் கூடாது. சமூகரீதியாக தான் இருக்க வேண்டும். அனைவருக்குமான கல்வி, மின்சாரம் தனியார் மயமாக்கப்படுகிறது. பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அம்பேத்கரின் விசுவாசிகள் என்று பொய்யான பிரச்சாரத்துடன் செயல்பட்டு வருகிறார்கள். சமத்துவத்திற்கும் சாமானிய மக்களுக்கும் எதிரான கொள்கையுடனும் திகழும் அவர்களை அம்பேத்கர் மணிமண்டபத்துக்குள் அனுமதிக்ககூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.