ஒரு கைப்பிடி மண்ணை எடுத்தாலும் அன்னூரில் சாகும் வரை உண்ணாவிரம் இருப்பேன்: அண்ணாமலை!

ஒரு கைப்பிடி மண்ணை எடுத்தாலும பாஜக மாநில தலைவரான நான்அன்னூரில் சாகும் வரை உண்ணாவிரம் இருப்பேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூர் ஒன்றியங்களில் உள்ள 6 கிராமங்களில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் சார்பில் சிப்காட் அமைக்கப்பட உள்ளது. இதற்காக 3,731 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. சிப்காட் அமைவதற்கு 6 கிராம பொதுமக்கள், விவசாயிகள், வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் வாகன பேரணி உண்ணாவிரத போராட்டம், கடையடைப்பு, நடைபயணம் என பல்வேறு போராட்டங்களையும் நடத்தினர்.

இந்த நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று அன்னூரில் பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் அன்னூர் பகுதியில் விவசாய நிலங்களை ஆர்ஜிதம் செய்து சிப்காட் அமைக்கும் தமிழக அரசிற்கு எதிராக பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதில் பேசிய அண்னாமலை கூறியதாவது:-

திமுகவிற்கு நேர் வழியில் வந்து பழக்கமில்லை. கொள்ளைப்புறம் வந்து தான் பழக்கம். அன்னூரில் சிப்காட்டிற்காக 3862 ஏக்கர் விவசாய நிலம் கைகப்படுத்த உள்ளனர். விவசாயிகளை தமிழகத்தில் புரிந்து கொண்ட ஒரே தலைவர் கர்மவீரர் காமராஜர். அதனால்தான் தமிழகத்தில் அதிக அளவில் அணைகளை கட்டினார். தண்ணீர் வரக்கூடிய நிலத்தை தரிசு நிலம் என்று காட்டி 3862 இயக்க நிலத்தை அபகரிக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு அறிவு இருக்கிறதா? நீங்கள் தவறாக வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் ஆனால் விவசாயிகள் சரியாக வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

தமிழகத்தில் தொழிற்சாலைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 48,195 ஏக்கர் நிலம் காத்துக் கொண்டிருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சியில் இருக்கும்போது நான்கு நிலையில் 2518 ஏக்கரில் தொழிற்பேட்டை அமைக்க நிலம் எடுத்தார்கள். ஆனால் இன்று அங்கு எந்த ஒரு தொழில் நிறுவனமும் இல்லை. துறைமுகம் இருக்கக்கூடிய தொழில் நிறுவனங்களை கொண்டு வர முடியவில்லை. இந்தியாவிற்கு தேவையான 40% வெட் கிரைண்டர்களை கோயமுத்தூரில் உற்பத்தி செய்யப்படுகிறது. சோமனூர் பகுதியில் இந்தியாவிற்கு தேவையான பாதிக்கு மேலான பவர்லூம் உள்ளது. மக்களாகவே இணைந்து நேச்சுரல் ஆர்கானிக் கிளஸ்டரை உருவாக்கியிருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது இங்கு 3282 ஏக்கர் நிலத்தை எடுத்து தொழில்பேட்டை அமைத்து நாங்கள் உங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறோம் என்று கூறுகிறீர்கள். அதையும் பார்ப்போம். தமிழகத்தில் ஸ்டாலின் அரசு வந்த பிறகு தமிழகத்திற்கு 2021ல் ஓராண்டில் 27 ஆயிரம் கோடி அந்நிய முதலீடு வந்துள்ளத. ஆனால் கர்நாடகத்தில் ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 600 கோடி வந்துள்ளது. மகாராஷ்டிராவில் ஒரு லட்சத்து 7,600 கோடி, டெல்லியில் 68,600 கோடி வந்துள்ளது. மோடி பிரதமராக வந்த பிறகு அன்னிய முதலீடு பெரும் அளவில் வந்துள்ளது.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் தரிசு நிலங்கள் உள்ளது. அங்கு இளைஞர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் அங்கு தொழில்பேட்டைகள் துவங்கினால் அதனை யாரும் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். ஆனால் அன்னூரில் வந்து தொழிற்பேட்டை அமைக்க வேண்டிய அவசியம் என்ன. அதில் தான் திமுகவின் பித்தலாட்டம் அடங்கியிருக்கிறது. அன்னூரில் இருக்கக்கூடிய தண்ணீருக்காக அதனை விற்று, அதனை பெரிய அளவில் சந்தைப்படுத்தி திமுக அமைச்சர்களுக்கு பெருமளவு பணம் கிடைப்பதற்காகவே படையெடுத்து வந்திருக்கிறார்கள். திராவிட மாடல் அரசுக்கு தேவை விவசாய நிலம் கிடையாது. பவானிசாகர் அணையின் தண்ணீர் மற்றும் நிலத்தடி நீர் அவிநாசி அத்திக்கடவு தண்ணீர் வேண்டும். அதற்காகத்தான் இங்கு வந்திருக்கிறார்களே தவிர நிலத்தை எடுத்து தொழில்பேட்டை அமைத்து அதன் மூலமாக சொல்லும் காரியத்தை சாதிப்பதற்காக வரவில்லை.

ஜி ஸ்கொயர் நிறுவனம் ஆளும் கட்சியின் நிறுவனம். 15 நாட்களுக்கு முன்பு இந்த ஜீ ஸ்கொயர் நிறுவனம் அரபு நாட்டிற்கு சென்று 578 கோடி ரூபாய் கொடுத்து 600 ஏக்கர் நிலத்தை வாங்கி இருக்கிறார்கள். விவசாயிகள் நன்றாக இருக்க வேண்டும் என்றால் முதலமைச்சர் மயிலாடுதுறை சீர்காழிக்கு செல்ல வேண்டும். அண்மையில் பெய்த மழையில் 100% விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. ஆனால் அங்கு ஒரு விவசாயிக்கு ஒரு குடும்ப அட்டைக்கு ஆயிரம் ரூபாய் மட்டுமே கொடுத்துள்ளார்கள். ஒரு பக்கம் ஆயிரம் ரூபாயை கொடுத்துவிட்டு அதே பகுதியில் டாஸ்மாக் கடையை திறந்து வைத்துள்ளார்கள். அன்னூரில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை அழித்து ஜி ஸ்கொயர் போன்ற நிறுவனங்களை பயன்படுத்தி சிப்காட் போர்வையில் வராத நிறுவனங்களுக்கு நன்றாக இருக்கும் விவசாய நிலங்களை எடுப்பதற்கு பெண்கள் தாய்மார்கள் வயிற்றெரிச்சலுடன் உள்ளனர்.

சென்னையில் மெட்ராஸ் ஐ நோய் பரவி வருகிறது. முதல்வர் உடன் சுகாதாரத்துறை அமைச்சர் செல்கிறார். சாதாரணமானவர் கூட துறையை பற்றி கேட்பார்கள். ஆனால் முதலமைச்சரோ தனது மகன் நடித்த கலகத் தலைவன் படம் குறித்து கேட்கிறார். 80 ஆண்டுகள் கடந்தாலும் பட்டத்து இளவரசர் பிளேபாயாக மட்டும் தான் இருப்பார். அவர் விவசாயிகளுக்காகவோ தமிழக மக்களுக்காக வேலை செய்பவராக திரையில் மட்டுமே இருப்பார். காக்கி உடை அணிய ஒரு தகுதி வேண்டும். தமிழகத்தில் உண்மையான விவசாய சங்கங்கள் யார் என மக்கள் புரிந்து கொள்ள இது ஒரு வாய்ப்பு. ஒரு கைப்பிடி மண்ணை எடுத்தாலும் பாஜக மாநில தலைவரான நான் அன்னூரில் சாகும் வரை உண்ணாவிரம் இருப்பேன். தைரியம் இருந்தால் ஒரு படி மண் எடுக்கட்டும்.எத்தனை ஐ ஏ எஸ் அதிகாரிகளை வேண்டுமானாலும் கூட்டி வாருங்கள். என் உயிருள்ள வரை ஒரு படி மண் எடுக்க முடியாது. இந்த அரசு மக்களுக்கான அரசு இல்லை, கார்ப்பரேட்களுக்கான அரசு. கூட்டணி கட்சிக்காரர்கள் போல நாங்கள் அடிமை இல்லை. அடுத்த ஒரு ஆண்டு மிக முக்கியம். ஆளும் கட்சியை எதிர்க்கிறோம். அதுவும் நான்கு எம்எல்ஏக்களை வைத்து கொண்டு தொண்டர்களை நம்பி எதிர்க்கிறோம். சாதாரண தொண்டனாக இருந்து காண்டா மிருகத்தை எதிர்க்கிறோம். என்ன நடந்தாலும் 2024ல் கரை சேர போவது உறுதி. இவ்வாறு அவர் பேசினார்.