குஜராத் மாநில முதலமைச்சராக, இரண்டாவது முறையாக, வரும் 12 ஆம் தேதி பாஜகவின் பூபேந்திர படேல் பதவி ஏற்க உள்ளார்.
182 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு, கடந்த 1 ஆம் தேதி முதற்கட்டமாக 89 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. மீதம் உள்ள 93 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, கடந்த 5 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்தத் தேர்தலில், ஆளும் பாஜக – காங்கிரஸ் – ஆம் ஆத்மி இடையே மும்முனை போட்டி நிலவியது. குஜராத் மாநிலத்தை பொறுத்தவரை, தொடர்ந்து 24 ஆண்டுகளாக பாஜக ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரது சொந்த மாநிலம் என்பதால், இங்கு மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்பதை, பாஜக கவுரவப் பிரச்னையாக பார்த்தது.
இந்நிலையில், குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்லில், இரண்டு கட்டங்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி அளவில் எண்ணப்பட்டன. தபால் வாக்குகள் எண்ணப்பட்டது முதல், ஆளும் பாஜகவே முன்னிலையில் இருந்தது. தற்போதைய நிலவரப்படி, மொத்தம் உள்ள 182 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 150-க்கும் மேற்பட்ட இடங்களில், ஆளும் பாஜக வெற்றியுடன் கூடிய முன்னிலையில் இருக்கிறது. எதிர்க்கட்சியாக காங்கிரஸ் பரிதாபமான நிலையில் தோல்வி அடைந்துள்ளது. வெறும் 16 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலைக் காட்டிலும் காங்கிரஸ் சுமார் 62 இடங்களை கோட்டை விட்டுள்ளது.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி 5 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதன்படி, குஜராத் மாநிலத்தில் ஏழாவது முறையாக, பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. இந்தத் தேர்தல் வெற்றி மூலம், பாஜக பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது.
இந்நிலையில், குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக, இரண்டாவது முறையாக, பூபேந்திர படேல் வரும் 12 ஆம் தேதி திங்கட்கிழமை பிற்பகல் 2 மணி அளவில் பதவி ஏற்க உள்ளதாக, குஜராத் மாநில பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டில் தெரிவித்து உள்ளார். இது குறித்து மேலும் பேசிய அவர், பதவி ஏற்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
குஜராத் வெற்றி குறித்து பேசிய முதலமைச்சர் பூபேந்திர படேல், “குஜராத் மாநில வளர்ச்சியை கருத்தில் கொண்டு பாஜகவுக்கு மீண்டும் மக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்துள்ளனர்,” என குறிப்பிட்டார்.