நீதிபதிகளை நியமிக்கும், ‘கொலீஜியம்’ முறைக்கு எதிராக மத்திய அரசும், துணை ஜனாதிபதியும் கடுமையான கருத்துக்களை தெரிவித்து வருவதற்கு உச்ச நீதிமன்றம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ‘சட்டத்தை அனைவரும் மதிக்க வேண்டும்’ என, அது கூறியுள்ளது.
உச்ச நீதிமன்றம் மற்றும்உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தை, உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய, ‘கொலீஜியம்’ தீர்மானிக்கிறது. கடந்த, 1991 ல் இருந்து இந்த நடைமுறை அமலில்உள்ளது. இந்நிலையில், நீதிபதிகள் நியமனம் தொடர்பாக, தேசிய நீதித் துறை நியமன கமிஷனை உருவாக்கும் வகையில், மத்திய அரசு, 2015ல் சட்டம் இயற்றியது. ‘இது செல்லாது’ என, உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளித்தது.
நீதிபதிகளை நியமிக்கும் கொலீஜியம் முறை குறித்து முன்னாள் மற்றும் இன்னாள் மத்திய அமைச்சர்கள் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். ராஜ்யசபா தலைவராக துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பொறுப்பேற்றார். அவர் பேசுகையிலும், இந்தப் பிரச்னை குறித்து குறிப்பிட்டார். ‘பார்லிமென்ட் இயற்றிய சட்டத்தை நீதிமன்றம் நிராகரிப்பது முறையானதல்ல’ என அவர் குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில், நீதிபதிகள் நியமனம் காலதாமதமாவது தொடர்பான வழக்கை நீதிபதிகள் சஞ்சய் கிஷண் கவுல், அபய் ஓக்கா, விக்ரம் நாத் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் சார்பில் ஆஜராகும் அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணியிடம் அமர்வு கூறியதாவது:-
சட்டம் இயற்றுவதற்கு பார்லிமென்டுக்கு அதிகாரம் உள்ளது. அதே நேரத்தில் அது முறையாக உள்ளதா என்பதை ஆய்வு செய்ய நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது. உச்ச நீதிமன்றத்தின் கொலீஜியம் முறை குறித்து அரசியல் சாசன பதவியில் இருப்பவர்கள் கருத்து தெரிவிப்பது முறையானதல்ல. இது குறித்து மத்திய அரசுக்கு உரிய அறிவுரை கூறவும்.
தற்போது நாட்டில் உள்ள அடிப்படை கட்டமைப்பு அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு இல்லை என்று நாளை மற்றொருவர் கூறுவார். இந்தச் சட்டத்தை பயன்படுத்த வேண்டும் அல்லது பயன்படுத்தக் கூடாது என்று வேறு சிலர் கூறுவர். இது தொடர்ந்தால், பொது நிர்வாகம் மற்றும் நீதி நிர்வாகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். நீதிபதிகள் நியமனம் தொடர்பாக நீங்கள் புதிதாக சட்டம் கொண்டு வரலாம். அது நீதிமன்றத்தின் பரிசீலனையில் நிலைநிறுத்தக் கூடியதாக இருந்தால் அதை ஏற்கத் தயாராக உள்ளோம்.
இந்த நாட்டில் உச்ச நீதிமன்றத்தால் நிலைநிறுத்தப்பட்ட சட்டம் அனைவருக்கும் பொருந்தும். நீதிபதிகள் நியமனம் தொடர்பான தற்போதைய நடைமுறை, உச்ச நீதிமன்றத்தால் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட சட்டமாகும். ஒரு சிலர் எதிர்ப்பதால், இந்தச் சட்டம் செல்லாது என்று கூற முடியாது. இது குறித்து மத்திய அரசுக்கு உரிய முறையில் அறிவுறுத்துங்கள். இவ்வாறு அமர்வு கூறியுள்ளது. வழக்கின் விசாரணை அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.