இமாச்சலப் பிரதேச தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரசுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

இமாச்சலப் பிரதேசம் குஜராத் ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சட்டமன்றத் தேர்தல் நடந்தது. குஜராத் சட்டசபை தேர்தலுக்கு இரண்டு கட்டங்களாகவும் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள 68 இடங்களுக்கு ஒரே கட்டமாகவும் தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து தேர்தலுக்குப் பிந்திய கருத்துக்கணிப்புகளின் படி பாஜகவே முன்னிலையில் இருந்தது. 34 முதல் 40 தொகுதிகள் வரை பாஜக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் கணித்திருந்தன. ஆனால் இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி இமாச்சலில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது காங்கிரஸ். மொத்தமுள்ள 68 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 40 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.

இமாச்சல் முதல்வரான ஜெயராம் தாகூர் சுமார் 37,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஆறாவது முறையாக வெற்றி பெற்றுள்ள நிலையில் தேர்தலில் ஆட்சியை இழந்ததை அடுத்து அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தற்போதைய நிலவரப்படி இமாச்சல பிரதேசத்தில் 43.90% வாக்குகளை காங்கிரஸ் கட்சியும் பாஜக 43 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது. இமாச்சல பிரதேசத்தை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருந்தாலும் வாக்கு சதவீதம் 0.90 சதவீதமாக இருக்கிறது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இமாச்சலப் பிரதேச முதல்வரை தேர்ந்தெடுப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெற இருக்கிறது. இதை அடுத்து எம்எல்ஏக்கள் சிம்லாவில் தங்கி இருக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி இருக்கிறது.

டெல்லி மாநகராட்சி தேர்தலில் படுதோல்வி குஜராத்தில் வரலாற்றுத் தோல்வியை சந்தித்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு இமாச்சலப் பிரதேசத்தில் மீண்டும் ஆட்சி கிடைத்திருப்பது ஓரளவு ஆறுதலான செய்தியாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இமாச்சலப் பிரதேசத்தில் பெற்ற வெற்றிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,” இமாச்சலப் பிரதேஷ் சட்டசபை தேர்தல் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்துக்கள் காங்கிரஸ் தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.