மாண்டஸ் புயல் தாக்கத்தை எதிர்கொள்ள மின்சார துறை சார்பில் 11 ஆயிரம் பேர் களத்தில் உள்ளனர். இரண்டு லட்சம் மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளன என்று மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற மாணவர்களுக்கான வெள்ளை அங்கி அணிவித்தல் மற்றும் தமிழ் மன்ற தொடக்க விழாவில் சுகாதாரத் துறை அமைச்சர்கள் சுப்பிரமணியன் மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பாலாஜி கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது:-
வடகிழக்கு பருவமழையின் போது பாதிக்கப்பட்ட பகுதிகள் அனைத்திலும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. மாண்டஸ் புயலின் தாக்கங்களை எதிர்கொள்ள தமிழ்நாடு மின் வாரியம் சார்பில் பல்வேறு மாவட்டங்களில் மொத்தம் .11,000 களப் பணியாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். 2 லட்சம் மின்கம்பங்கள் தயாராக உள்ளன. பழுதடைந்து இருந்த 44 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. 14 லட்சத்திற்கும் மேற்பட்ட பராமரிப்பு பணிகள் சிறப்பாக செய்யப்பட்டு மின்வினியோகம் தடையின்றி நடைபெற்று வருகிறது. இதுவரை எந்த ஒரு சிறிய பிரச்சனையும் இல்லாத வகையில் சீரான மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-
கோவைக்கு செந்தில் பாலாஜி பொறுப்பு அமைச்சராக பொறுப்பேற்றது முதல், மற்ற மாவட்டங்களுக்கு எல்லாம் முன்மாதிரியாக கோவை மாவட்டம் திகழ்கிறது. கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களை ராகிங் செய்வது வழக்கமான ஒன்றாக இருந்த நிலையில் தற்போது இந்த மனநிலை மாணவர்களிடம் மாறி இருக்கிறது. குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் முதலாண்டு மாணவர்களுக்கான வெள்ளை அங்கியை, இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவிகள் கொண்டு வந்து கொடுத்தத்து மகிழ்ச்சி அளிக்கிறது.
கடந்த ஆண்டு வரை மாணவர்களின் எண்ணிக்கை 150 ஆக இருந்தது. இந்த ஆண்டு ஐம்பது கூடுதல் மாணவர்களுக்கு சேர்க்கைக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் தந்திருக்கிறது. 11 மருத்துவக் கல்லூரிகளரில் 1,450 மாணவர்களை சேர்க்க ஆண்டு ஒன்றிய அரசு ஒப்புதல் தந்திருக்கிறார்கள். ஆண்டுதோறும் 10 ஆயிரத்து 825 மாணவர்கள் தமிழகத்தில் சேர்க்கை நடக்கிறது. இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் கூட இந்த அளவில் மாணவர் சேர்க்கை இல்லை.
தென்காசி, மயிலாடுதுறை, பெரம்பலூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகளில் அமைய வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்து வலியுறுத்தி வருகிறார். மேலும், அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகள் என்பதே முதலமைச்சர் இலக்கு.
7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு முதல்வர் மடிக்கணிணி விரைவில் வழங்குவார். மத்திய அரசு பூர்த்தி செய்து வர வேண்டிய 30 இடங்களில் 12 இடங்கள் மட்டுமே பூர்த்தி செய்துள்ளனர். 12 இல் 8 பேர் தமிழக மாணவர்கள். கல்வி திறனில் தமிழக மாணவர்கள் தொடர்ந்து முன்னிலையில் உள்ளனர்.
இவ்வாறு மா.சுப்பிரமணியன் பேசினார்.