புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அரசை குறை சொல்ல முடியாது: அண்ணாமலை

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அமைச்சர்கள், அதிகாரிகள் களத்தில் இறங்கி பணியாற்றி வருகிறார்கள் என்றும், அரசை இதில் குறை கூற முடியாது எனவும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருக்கிறார்.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த மாண்டஸ் புயல் சென்னை மாமல்லபுரம் அருகே நள்ளிரவு பலத்த மழை மற்றும் அதிவேக காற்றுடன் கரையைக் கடந்தது. இதனால் கடல் நீர் கரையோரம் இருந்த வீடுகளுக்குள் புகுந்தன. பலத்த காரணமாக சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகுகள் கடலில் மூழ்கி சேதமடைந்தன. இந்த நிலையில் இன்று பாஜக மாநில இளைஞரணி செயற்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நாடாளுமன்ற உறுப்பினரும் பாஜக தேசிய இளைஞர் அணி தலைவருமான தேஜஸ்வி சூர்யா மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர். இந்த செயற்குழு கூட்டத்திற்கு பின் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் அடிக்கடி புயல் பிரச்சனை வருகிறது. சென்னை மற்றும் பல இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. எல்லா நேரங்களிலும் அரசை குறை கூற முடியாது. பேரிடர் மேலாண்மைக்கு சிறப்பு கவனம் அரசு செலுத்தி அதற்கு மாநிலம் முழுவதும் குழுவை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக கடற்கரையோர மாவட்டங்களுக்கு ஏற்படுத்த வேண்டும். தற்போது புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அமைச்சர்கள், அதிகாரிகள் களத்தில் பணியாற்றி வருகிறார்கள், அரசை இதில் குறை கூற முடியாது. தொடர்ந்து இதே போல் களப்பணியாற்ற வேண்டும் என தான் கேட்டுக்கொள்கிறோம். முதலமைச்சர் யாரை வேண்டுமானாலும் அமைச்சராக அதிகாரம் உள்ளது.

கவர்னர் ஆன்லைன் சூதாட்ட உரிமையாளர்களை சந்தித்தது குறித்து எங்களுக்கு தெரியாது. ஆன்லைன் சூதாட்டத்தை முறைப்படுத்த வேண்டும், தடை செய்ய வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்திற்கு தீர்வு வேகமாக கிடைக்க வேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பு. பொதுமக்கள் பேசும் அளவுக்கு ஊழல் அதிகரித்து வருகிறது. அடுத்த ஊழல் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். அரசியலில் அதர்ம வழியில் சென்றால் கடைசியில் பூஜ்யம் தான். சிறுபான்மையின மாணவருக்கான கல்வி உதவித்தொகை வேறொரு திட்டத்தின் பெயரில் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.