மாண்டஸ் புயல் காரணமாக மின்சாரத் துறையில் பெரிய சேதாரங்கள் இல்லை: செந்தில் பாலாஜி

மாண்டஸ் புயல் காரணமாக பெய்த மழையால் மின்சாரத் துறையில் பெரிய சேதாரங்கள் ஏற்படவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

மாண்டஸ் புயலின் காரணமாக சென்னையில் நேற்று இரவு முதல் பலத்த காற்றுடன் மழை பெய்தது. தொடா்ந்து, இன்று அதிகாலையிலும் நீடித்த மழையால் நகா் முழுவதும் தாழ்வான பகுதிகளிலும் குடியிருப்புப் பகுதிகளிலும் மழைநீா் தேங்கியது. அதேபோல், சாலைகளிலும் வெள்ளநீா் பெருக்கெடுத்து ஓடியது. அண்ணா சாலை, காமராஜா் சாலை, ஈவெரா பெரியாா் சாலை, ஆற்காடு சாலை, ராஜாஜி சாலை, 100 அடி சாலை, கிழக்கு கடற்கரைச் சாலை, ராஜீவ் காந்தி சாலை உள்ளிட்ட அனைத்து பிரதான சாலைகளிலும் மழைநீா் ஆறாக ஓடியது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டதால் சாலைகளில் அதிக அளவில் வாகனங்கள் காணப்படவில்லை. மேலும், மழை காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதல் மின்சாரம் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “மழை காரணமாக மின்சாரத்துறையில் பெரிய சேதாரங்கள் ஏற்படவில்லை. இன்று மதியத்திற்குள் மின்சார வினியோகம் நிறுத்திவைக்கப்பட்ட இடங்களுக்கு மின்சாரம் வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.