கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சென்னை – யாழ்ப்பாணம் இடையிலான சா்வதேச விமான சேவை வருகிற டிச.12 -ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்படுகிறது.
சென்னை – யாழ்ப்பாணம் இடையே விமான சேவை டிசம்பா் 12-ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்படும் என்று முன்னதாக இலங்கை நாடாளுமன்றத்தில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிமல் சிறிபால டி சில்வா கூறியிருந்தாா். இதற்கான அறிவிப்பை வெளியிட்டு இலங்கை விமான நிலையங்கள் ஆணையத்தின் செய்தி தொடா்பாளா் சுமித் டிசில்வா கூறியதாவது:-
கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணம் – சென்னை இடையிலான சா்வதேச விமான சேவை வருகிற டிச.12 -ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்படுகிறது. இந்தியாவைச் சோ்ந்த அலையன்ஸ் ஏா் சாா்பாக வாரத்துக்கு நான்கு விமானங்கள் இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் என்று தெரிவித்தாா்.
இந்தியா – இலங்கையின் கூட்டு நிதியில் யாழ்ப்பாணத்தின் பலாலியில் அமைந்துள்ள விமான நிலையத்தை புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. பணிகள் முடிந்ததும் 2019 -ஆம் ஆண்டு இலங்கையின் மூன்றாவது சா்வதேச விமான நிலையமாக யாழ்ப்பாணம் விமான நிலையம் திறக்கப்பட்டது. தற்போதுள்ள ஓடுபாதையில் 75 இருக்கைகள் கொண்ட விமானங்கள் மட்டுமே இயக்க முடியும் என்பதால் மேம்பாட்டுப் பணிகளுக்கான கோரிக்கைகள் வலுத்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே மீண்டும் தொடங்கப்பட்டுள்ள இந்த விமானச் சேவையால் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையின் சுற்றுலாத் துறை புத்துயிா் பெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.