இணையவழி குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. படித்தவர்களை கூட எளிதில் ஏமாற்றி விடுகின்றனர். அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என, டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்தார்.
கோவை கமிஷனர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடத்திய பின்னர் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறியதாவது:-
தமிழகத்தில் குற்றங்கள் குறைந்துள்ளன. கொலை குற்றங்கள் குறையும் பட்சத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளதாக அர்த்தம்.அந்த அடிப்படையில் கடந்தாண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை தமிழகத்தில் 1597 கொலை சம்பவங்கள் நடந்தன. இந்தாண்டு அதே கால கட்டத்தில் 1368 கொலைகள் நடந்துள்ளன. இதன்படி 15 சதவீதம் குறைந்துள்ளன.
ஆதாயக்கொலை சம்பவங்கள் கடந்தாண்டு அக்டோபர் வரை 89 சம்பவங்கள் நடந்தன. இந்தாண்டு 79 ஆதாயக்கொலைகள் நடந்துள்ளன. கொள்ளை சம்பவங்கள் கடந்தாண்டில் 111 நடந்துள்ளன. இந்தாண்டில் 96 ஆக உள்ளது.போலீசாருக்கு குற்றங்களை கண்டுபிடிக்க பயனுள்ளதாக இருப்பது ‘சிசிடிவி’க்கள் தான். எனவே மாநகரங்கள் மாவட்டங்களில் அரசு செலவில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படுகின்றன.
தமிழகத்தில் இதுவரை 45 ஆயிரம் இணைய வழி குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இத்தகைய மோசடிகளில் பணம் வெளி மாநிலம் வெளிநாட்டுக்கு சென்று விடுகிறது. அப்படி வெளிநாட்டுக்கு சென்று விட்டால் அந்த பணத்தை மீட்பது மிகவும் சிரமம்; கால தாமதம் ஆகும்.
வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா கொண்டு வரப்படுவதை கண்காணித்து தடுக்க, சோதனைச் சாவடிகள் செயல்படுகின்றன. கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள் கொண்டு வரப்படுவதை தடுக்க, ஆறு இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தென்காசி, பொள்ளாச்சி, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து முக்கிய சுங்கச்சாவடிகளிலும் நவீன கேமரா நிறுவும் திட்டமும் தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.