மீன்வளத்துறை அமைச்சருக்கு விலை தான் தெரியும், வலையைப் பற்றித் தெரியாது: ஜெயக்குமார்

கோவளம் மீனவர் பகுதியில் மாண்டஸ் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுக அரசை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே கோவளம் மீனவர் பகுதியில் மாண்டஸ் புயலினால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார் கூறியதாவது:-

திமுக ஆட்சி என்பது ஒரு போட்டோ சூட் மாதிரி தான்.. வேறு எதுவும் இல்லை.. மக்களுக்கு இது வரையிலும் என்ன நல்லது செய்தார்கள்.. ஒன்றும் கிடையாது. மீனவர்கள் மழையால் 10 நாட்களாகக் கடலுக்குப் போகாமல் இருந்துள்ளனர். படகுகள், வலைகள் சேதம் அடைந்ததால் இன்னும் 10 நாட்களுக்கு கடலுக்கு செல்ல மாட்டார்கள்.. வயிற்றில் ஈரத் துணியைக் கட்டிக்கிட்டு பசியும் பட்டினியுமா இருக்க முடியாது? அவர்களுக்குக் கூட்டுறவுச் சங்கம் மூலம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். நாங்கள் கூட்டுறவுச் சங்க ஆரம்பித்து வைத்துள்ளோம்.. அதில் ஆண்கள், பெண்கள் என 4 லட்சம் பேர் சேர்ந்துள்ளனர். அதன் மூலம் நிவாரணம் வழங்க வேண்டும்.

மீனவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறி வருகிறார் முதல்வர். திமுக ஆட்சி என்பது வாயைத் திறந்தாலே பொய்ச் சொல்லும் ஆட்சி! மீனவர்களின் பைபர் படகு, மீன்பிடி வலை, இயந்திரம் உள்ளிட்டவை பழுதாகி உள்ளது. இது போன்ற நேரங்களில் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். முழு வெள்ள நிவாரணம், கட்டுமரம் முழுமையாகப் பழுதானது, வலை சேதமடைந்தது போன்ற சேதங்கள் தனித்தனியாக நிவாரணம் வழங்க வேண்டும். மத்திய அரசு இதற்கெல்லாம் தனித்தனியாக நிதியை ஒதுக்கி நிவாரணம் வழங்க வேண்டும். இதனை நேரடியாக மீனவர்களின் வங்கிக் கணக்கில் போடவேண்டும். மத்திய அரசு கொடுக்கவில்லை என்று கணக்குப் போடாமல்.. நாங்கள் எங்கள் ஆட்சியில் செய்தது போல.. முதலில் மாநில அரசு மீனவர்களுக்கு நிவாரணம் கொடுத்து விட்டு.. அதன் பிறகு மத்திய அரசுக்கு அழுத்தம் தரலாம். நாங்கள் அதுபோல தான் செய்தோம்..

மீனவர்கள் பயனடையும் வகையில் ஆலம்பரை குப்பதில் 250 கோடியில் மீன்பிடி துறைமுகம் கட்ட திட்டமிட்டிருந்தோம். ஆனால் இதை திமுக அரசு செயல்படுத்த வில்லை. சென்னை மீன்பிடி துறைமுகத்தில் அதிக அளவில் படகுகள் வந்ததால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் செங்கல்பட்டு மாவட்டத்திலும் மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும். இதன் காரணம் மீனவர்கள் பொருளாதாரம் வளர்ச்சி அடையும். எனவே, அதை வேகமாகக் கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், வழக்கம் போல திமுக அரசு மக்கள் நலனைக் கண்டுகொள்ளவில்லை. ஜெயலலிதா ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களைப் பார்த்து.. பார்த்து அதேபோல ஸ்வாகா செய்துவிடுகிறார்கள். அதிமுக காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை இவர்கள் கண்டு வந்தது போல, கத்தரிக்கோல் கொண்டு வெட்டி விட்டு லேபிள் ஒட்டிவிடுகிறார்கள். அப்படித்தான் இந்த அதிமுக ஆட்சி இருக்கிறது. மேலும், அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களைத் தொடங்காமல் அதை முடக்கும் நடவடிக்கைகளிலும் இந்த திமுக அரசு இறங்கியுள்ளது. மீன்வளத்துறை அமைச்சர் மீனவர்களுக்கு உதவும் வகையில் சிறிய மீன் துறைமுகங்கள் அமைக்க வேண்டும். கடல் அரிப்பைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதற்கான திட்டங்களை முன்னெடுக்காமல் மீனவர்களின் வசூல் செய்வதில் மட்டமே இந்த அரசு குறியாக உள்ளது.

மீன்வளத்துறைக்கு அமைச்சராக உள்ளவருக்கு வலை பற்றி தெரிந்திருக்க வேண்டும் அல்லது மீன்பிடி தொழிலைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும். அப்படிப்பட்டவர் தான் ஒரு மீன்வளத் துறை அமைச்சராக இருக்க வேண்டும். எப்போதும் அப்படித்தான் இருந்தார்கள். என்னைக் கேட்டால் மீன்பிடி தொழில் குறித்தும் சரி, மீன்பிடி வலைகளில் குறித்தும் அத்தனையும் சொல்வேன். ஆனால் திமுக ஆட்சியில் உள்ள மீன்வளத்துறை அமைச்சருக்கு மீன் எத்தனை வகை உள்ளது என்று கூட தெரியாது. பெரிய வலை கூட தெரியாத ஒருவர் ஒரு மீன்வளத்துறை அமைச்சராக உள்ளார். பெரிய வலை என்று கேட்டால் அப்படினா என்ன என்று கேட்கிறாராம். அவருக்கு விலை தான் தெரியும் வலையைப் பற்றித் தெரியாது. இப்படி இருக்கும் அமைச்சரை வைத்து என்ன செய்வது. புயலால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.