கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி முன் 26ம் தேதி போராட்டம்: வேல்முருகன்

17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 26ம் தேதி மாலை நெய்வேலி என்எல்சி வளாகம் முன்பு போராட்டம் நடைபெறவுள்ளது என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறினார்.

என்எல்சி நிறுவனத்துக்கு நிலம் மற்றும் வீடு கொடுத்த விவசாயிகளின் போராட்ட கூட்டமைப்பு சார்பில், அனைத்து கட்சி கூட்டம் கடலூரில் நடந்தது. தவாக, விசிக, கம்யூனிஸ்ட்டுகள், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் ஏராளமான விவசாய சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். பின்னர் தவாக தலைவர் வேல்முருகன் கூறியதாவது:-

என்எல்சி நிறுவனம், 53 கிராமங்களில் விவசாயிகளிடமிருந்து ஏராளமான நிலங்களை கையகப்படுத்தியுள்ளது. நிரந்தர வேலை, வேலை பெற விரும்பாதவர்களுக்கு வயது, கல்வி தகுதி அடிப்படையில் ரூ.50 லட்சம் இழப்பீடு உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 26ம் தேதி மாலை நெய்வேலி என்எல்சி வளாகம் முன்பு போராட்டம் நடைபெறவுள்ளது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.