இந்தியாவில் 100 இளைஞர்களில் 42 பேருக்கு வேலையில்லை: ராகுல் காந்தி!

நாட்டில் 100 இளைஞர்களில் 42 பேர் வேலையில்லாமல் உள்ளனர் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

ராகுல்காந்தி ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3,570 கி.மீ. தூரத்திற்கான 150 நாள்கள் நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். செப்டம்பர் 7-ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில், நடைபயணத்தைத் தொடங்கிய அவர், 3,570 கிலோமீட்டர் தூரம் கடந்து அடுத்த ஆண்டு காஷ்மீரில் முடிவடைகிறது. நடைப்பயணம் இதுவரை, தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம் மற்றும் இப்போது ராஜஸ்தானின் சில பகுதிகளை கடந்து சென்று கொண்டிருக்கிறது..

இந்நிலையில் நாட்டில் 100 இளைஞர்களில் 42 பேர் வேலையில்லாமல் உள்ளனர் என்று மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். டுவிட்டர் பக்க பதிவில் அவர் கூறியுள்ளதாவது:-

நாட்டில் 100 இளைஞர்களில் 42 பேர் வேலையில்லாமல் உள்ளனர். 45 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளனர். இந்தியாவின் இளைஞர்களின் அவல நிலையை இந்த வேலையின்மை புள்ளிவிவரங்கள் தெளிவாகக் காட்டுகின்றன. பிரதமரே, இன்று நாட்டின் இளைஞர்களின் கண்களில் கண்ணீரும், காலில் கொப்புளங்களும் உள்ளன, ஆனால் அவர்கள் தங்கள் வேலைவாய்ப்பைப் பெற்று நாட்டை ஒருங்கிணைக்கும் வரை அவர்கள் நிறுத்த மாட்டார்கள். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.