புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி நல்லவர்தான். ஆனால் வல்லவர் இல்லை என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
புதுச்சேரி முன்னாள் அமைச்சரும், புதுச்சேரி மாநில திமுக அவைத் தலைவருமான எஸ்.பி.சிவக்குமார் இல்லத் திருமணம் விழுப்புரம் மாவட்டம் பட்டானூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் பங்கேற்று திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்தனர். இந்த திருமண விழாவில், திமுக உயர்மட்ட நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர். இந்த திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
இந்த மணவிழாவில் நான் வருவதற்கு வாய்ப்பு கிடைத்ததற்காக மகிழ்ச்சியடைகிறேன். புதுச்சேரியில் கலைஞர் நாடகம் நடைபெற்ற போது சில பேரால் அவர் தாக்கப்பட்டார். அப்பொழுது தந்தை பெரியார் ஈரோட்டுக்கு அழைத்து சென்று குடியரசு பத்திரிக்கையில் பணியாற்ற வாய்ப்பு கொடுத்தார். இதனால் கலைஞருக்கும் தந்தை பெரியாருக்கு ஒரு புது பாதை அமைத்து தந்த ஊர்தான் இந்த புதுச்சேரி. திராவிட இயக்கத்திற்கு இலக்கிய தலைநகர் என்ற ஊர்தான் இந்த புதுச்சேரி. கலைஞர் அவர்களுக்கு மிகவும் பிடித்த ஊர் தான் புதுச்சேரி.
தமிழகத்தையும், புதுச்சேரியையும் பிரித்துப் பார்க்கவில்லை. அதனால் தான் எம்.பி தேர்தலில் 40 தொகுதி என்று குறிப்பிடுகிறோம். தமிழகத்தில் மலர்ந்துள்ள ஆட்சி திராவிட மாடல் ஆட்சி என்று சொல்கிறோம். அப்படி பட்ட ஆட்சி புதுச்சேரிக்கு வருவது தேவை. உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் ஆசைதான். திமுக எம்.எல்.ஏக்கள் நிர்வாகிகள் இங்கு திமுக ஆட்சி வரவேண்டும் என்ற எண்ணத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஏற்கனவே புதுச்சேரியில் திமுக பல முறை ஆட்சியில் இருந்தவர்கள் தான். நிச்சயமாக சொல்கிறேன் திமுக ஆட்சி புதுச்சேரி மாநிலத்தில் உதயமாகும். அதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம். மேலும் புதுச்சேரி மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலிலும் சரி, அதை தொடர்ந்து வரும் சட்டமன்ற தேர்தலிலும் சரி, நாம் ஆட்சியை அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இப்போதே நீங்கள் பணியாற்ற வேண்டும். யாருடன் கூட்டணி, எப்படிப்பட்ட கூட்டணி என்பதையெல்லாம் தேர்தல் நேரத்தில் முடிவெடுப்போம். ஆனால் வெற்றிக்கு இப்போதே அச்சாரமாக கட்சி பணிகளை ஆற்ற வேண்டும்.
இப்போது புதுச்சேரியில் நடைபெறும் ஆட்சி மக்களால் ஆன ஆட்சி. ஆனால் மக்களுக்காக செயல்படும் ஆட்சி இல்லை. உயர்ந்த மனிதர் தான் ஆட்சி செய்கின்றார். ஆனால் அடிபணிந்துள்ளார். ரங்கசாமி முதல்வர் ஒரு பொம்மை முதல்வராக செயல்பட்டு வருகிறார். ரங்கசாமி நல்லவர் தான். ஆனால் வல்லவர் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.
காங்கிரஸ் உடன் திமுக கூட்டணியில் தொடர்ந்து வரும் நிலையில், புதுச்சேரியில் திமுக ஆட்சி ஆமையும் என முதல்வர் ஸ்டாலின் பேசியிருப்பது காங்கிரஸ் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இதுபற்றிப் பேசியுள்ள புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, “புதுச்சேரியில் திமுக ஆட்சி அமையும் என கட்சியினரை ஊக்கப்படுத்துவதற்காக முதல்வர் ஸ்டாலின் கூறி இருப்பார்” எனத் தெரிவித்துள்ளார். மேலும், தமிழக முதல்வர் ஸ்டாலின், புதுச்சேரியில் திமுக ஆட்சி அமையும் எனக் கூறியதில் எந்தத் தவறும் இல்லை, கட்சியினரை ஊக்கப்படுத்துவதற்காக முதல்வர் ஸ்டாலின் கூறி இருப்பார். தமிழ்நாட்டைப் போல் புதுச்சேரியிலும் திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடரும் என நாராயணசாமி தெரிவித்துள்ளார்.