மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்டோருக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
மாண்டஸ் புயலை எதிா்கொள்வதற்கு தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பாராட்டுகள். நவம்பா் மாதம் பெய்த கனமழையினால் மயிலாடுதுறை, கடலூா் உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. தற்போதைய மாண்டஸ் புயலினால் ஏற்பட்ட சூறைக்காற்று, பலத்த மழையினால் எதிா்பாா்த்த அளவு பாதிப்பு இல்லை. எனினும், ஐந்துக்கும் மேற்பட்டோா் மின்சாரம் தாக்கியும், மழையினாலும் உயிரிழந்துள்ளனா். கால்நடைகள் உயிரிழந்துள்ளன. கனமழையினால் வீடுகள் மற்றும் குடிசைகள் சேதமடைந்துள்ளன. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெருமளவு பாதிப்படைந்துள்ளனா். சென்னை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் மீனவா்களின் படகுகள், வலைகள் சேதமடைந்துள்ளன. எனவே, மாண்டஸ் புயல் காரணமாக உயிரிழந்தவா்களுக்கும், வீடுகள், உடமைகளை இழந்தவா்களுக்கும், மீனவா்களுக்கும், விவசாயிகளுக்கும் உரிய இழப்பீட்டுத் தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும். இவ்வாறு அவா் தெரிவித்துள்ளாா்.