தமிழகத்திற்கான ரூ.10,879 கோடி ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை ஒன்றிய அரசு விரைவில் வழங்க வேண்டும் என, மத்திய சென்னை திமுக எம்பி தயாநிதி மாறன் வலியுறுத்தினார்.
மக்களவையில் நேற்று துணை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று மத்திய சென்னை தொகுதி திமுக எம்பி தயாநிதி மாறன் பேசியதாவது:-
2022-23ம் நிதியாண்டிற்கான துணை மானிய கோரிக்கையாக ரூ.3.26 லட்சம் கோடி நிதி வழங்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலை ஒன்றிய அரசு கேட்கிறது. இதில், உரங்கள், உணவு, எரிபொருள் ஆகியவற்றுக்கே பெரும்பாலான நிதி கேட்கப்பட்டுள்ளது. உரம், யூரியா மானியத்திற்கு ரூ.1.09 லட்சம் கோடியை நிதி அமைச்சர் கேட்டுள்ளார். ‘மேக் இன் இந்தியா’ என்று பிரதமர் கூறுகிறார். அப்படியென்றால் எல்லாமே உள்நாட்டில் தயாரிக்கப்பட வேண்டும். ஆனால் இன்னும் இந்த அரசு இறக்குமதியை தான் நம்பிக் கொண்டிருக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளியே இல்லை. கடந்த 8 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்துள்ளீர்கள். இதற்கு ஒரு தீர்வு கண்டிருக்க வேண்டாமா? ஆனால், நல்ல லாபம் தரக் கூடிய உர ஆலைகளைக் கூட ஒன்றிய பாஜ அரசு விற்பனை செய்வதில் குறியாக உள்ளது.
உணவு மற்றும் பொது விநியோக துறைக்கு ரூ.80,000 கோடி நிதி கேட்கப்படுகிறது. இதில், 4ல் 3 பங்கு பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்திற்கு வழங்கப்படுகிறது. கொரோனா காலத்தில் இத்திட்டத்தில் வழங்கப்பட்ட இலவச ரேஷன் பல ஏழைகளுக்கு பலன் அளித்ததை மறுக்க முடியாது. ஆனால், தற்போது பணவீக்கத்தை எதிர்த்து போராட நிதி அமைச்சர் இத்திட்டத்தை ஒரு கருவியாக பயன்படுத்துகிறார். உணவுப் பொருட்கள் விலை அதிகரித்து விட்டதால் இத்திட்டத்தை பாஜ அரசு தொடர்கிறது. அதுதவிர தேர்தல்களும் இருக்கிறதே. ஏழைகளுக்கு மானியம் வழங்குவதை நாங்கள் ஒருபோதும் எதிர்க்க மாட்டோம். ஆனால், மானியம் தான் தேசத்தையே நாசமாக்குகிறது என நீங்கள்தான் கூறுகிறீர்கள். தேர்தலில் வெற்றி பெற ஒரு பேச்சும், செயல் வேறுவிதமாகவும் நடந்து கொள்கிறீர்கள். ஏழைகளை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்பதுதான் திராவிட கொள்கை.
அனைத்து பெண்களும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாற வேண்டும் என்கிறது அரசு. ஆனால் சமையல் எரிவாயு விலை ஒவ்வொரு பெண்களின் கண்களிலும் கண்ணீரை வரவழைக்கிறது. ரஷ்யாவுடனான நட்பை பயன்படுத்தி மலிவான விலையில் கச்சா எண்ணெய் வாங்கினீர்கள். ஆனால் அதற்கான பலன் சாமானியனுக்கு போவதில்லை, அரசு கஜானாவிற்கே திரும்பிச் செல்கிறது. கொரோனா காலத்தில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத சரிவை கண்டதால் ஒன்றிய அரசு கூடுதல் வருவாய் ஈட்டியது. ஆனால் அந்த சமயத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல், செஸ், கலால் வரியை உயர்த்தினீர்கள். அந்த பணத்தில்தான் கொரோனா தடுப்பூசியை தந்தீர்கள். அதை ஒன்றும் இலவசம் என்று கூறி விட முடியாது. இப்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் 76 டாலருக்கு கிடைத்தும் அதற்கான பலனை சாமானியனுக்கு நீங்கள் தரவில்லை. சர்வதேச சந்தையை பொறுத்துதான் பெட்ரோல், டீசல் விலை மாறும் என்றால் கடந்த 200 நாட்களாக எதுவுமே ஆகவில்லையே? குஜராத் தேர்தலுக்கு எதுவும் நடக்காமல் பார்த்துக் கொண்டீர்கள். இந்த அரசு உண்மையில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த விரும்பினால், எரிபொருள் விலை சுமையை குறைத்திருக்க வேண்டும்.
உள்நாட்டில் உருவாக்கப்பட்ட 5ஜி தொழில்நுட்பத்தை அமெரிக்கா உட்பட உலகெங்கிலும் தர தயாராக இருக்கிறீர்கள். ஆனால், பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்லுக்கு 4ஜியை கூட தராமல் இருக்கிறீர்கள். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை மோசமான திட்டம் என்றீர்கள். ஆனால் இன்று அந்த திட்டத்திற்கு ரூ.16,400 கோடி கூடுதல் நிதி கேட்கிறீர்கள். மோசமான திட்டத்தை ஏன் ஆதரிக்கிறீர்கள்? காரணம், பாஜ அரசு வேலைவாய்ப்பை வழங்குவதில் முற்றிலும் தோல்வி அடைந்து விட்டது. அதை தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை கொண்டு சமாளித்துக் கொண்டிருக்கிறார்கள்.
‘வடக்கு வளர்கிறது, தெற்கு தேய்கிறது’ என அறிஞர் அண்ணா கூறினார். இதுதான் தற்போது ரயில்வே திட்டங்களில் நடந்து வருகிறது. வடக்கில் பல ரயில் திட்டங்கள் செயல்படுத்தும் நிலையில், தென் மாநிலங்கள் குறிப்பாக தமிழகம் அதிகம் புறக்கணிக்கப்படுகிறது. பொது விநியோகத் துறையை பொறுத்த வரை 2018-19 முதல் 2021-22 வரை தமிழகத்திற்கு வழங்க வேண்டிய மானியம், ரூ.5903 கோடி இன்னும் நிலுவையில் உள்ளது. அதே போல, சர்க்கரை, அரிசி மானியங்களும் நிலுவையில் உள்ளன. குறிப்பாக, 2020-21, 2021-22 மற்றும் 2022-23 (ஏப்ரல் முதல் ஜூன் வரை), ஜிஎஸ்டி இழப்பீடு ரூ.10,879 கோடி இன்னும் உங்களிடம் நிலுவையில் உள்ளது. இந்த நிலுவை தொகையை விரைவில் வழங்குவீர்கள் என எதிர்பார்க்கிறேன். வலுவான மாநிலங்களே வலுவான ஒன்றியத்தை உருவாக்குகின்றன. எனவே குஜராத்தை பலப்படுத்துவது மட்டுமல்ல; தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களையும் வலுவாக மாற்றுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.