மாண்டஸ் புயலால் உருவான குப்பைகளை உடனே அகற்ற வேண்டும்: அன்புமணி

மாண்டஸ் புயலால் உருவான குப்பைகளை உடனே அகற்ற வேண்டும். நோய் பரவலைத் தடுக்க குப்பைகள் அகற்றப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினிகளை தெளிக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி கூறியுள்ளார்.

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மாண்டஸ் புயல் கடந்த 9-ந்தேதி இரவே கரையை கடந்து விட்டாலும் கூட, அதன் பிறகு தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த 4 நாட்களாக அகற்றப்படாத குப்பைகள் சாலைகளிலும், தெருக்களிலும் பரவிக் கிடக்கின்றன. தொடர்ந்து பெய்து வரும் மழை நீரில் ஊறுவதால் அவற்றிலிருந்து தாங்க முடியாத அளவுக்கு துர் நாற்றம் வீசத் தொடங்கி உள்ளது. மரக்கழிவு குப்பைகள் உடனடியாக அகற்றப்படா விட்டால் நிலைமை மேலும் மோசமடைந்து, தொற்று நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமாக உள்ளன. எனவே, இனியும் தாமதிக்காமல் குவிந்து கிடக்கும் மரக்கழிவு குப்பைகளை உடனடியாக அகற்ற தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நோய் பரவலைத் தடுக்க குப்பைகள் அகற்றப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினிகளை தெளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.