மோடியை கொல்ல வேண்டும் எனப் பேசிய காங்கிரஸ் தலைவர் ராஜா படேரியா கைது!

அரசியலமைப்பை பாதுகாக்க பிரதமர் மோடியை கொல்ல வேண்டும் என பேசிய மத்திய பிரதேச காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜா படேரியாவை போலீசார் கைது செய்தனர். ராஜா படேரியாவின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேச மாநில காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ராஜா படேரியா, மக்களை மதம், ஜாதி, மொழி அடிப்படையில் பிரதமர் மோடி பிரிக்கிறார். தலித், பழங்குடியினர், சிறுபான்மையினரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. அரசியலமைப்பு சட்டத்தை பாதுக்காக வேண்டுமெனில், மோடியை கொல்ல வேண்டும்; இதற்கு நீங்கள் தயாரா? என தொண்டர்கள் மத்தியில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. படேரியாவின் பேச்சுக்கு பாஜக தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் அவரைக் கைது செய்ய வலியுறுத்தினர். அதன்பேரில், ராஜா படேரியா மீது மத்தியப் பிரதேச காவல்துறை வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளது.

இந்நிலையில், பன்னா மாவட்ட நீதிமன்றத்தில் ராஜா படேரியா இன்று ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரது ஜாமீன் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது.

பின்னர், நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த ராஜா படேரியா, ‘சித்தாந்தத்திற்காக நான் போராடுகிறேன். மோடி குறித்து அந்த வார்த்தைகளை நான் சொல்லவில்லை. நான் மகாத்மா காந்தியின் சீடர்’ என்று கூறினார்.