கடந்த 5 நிதியாண்டுகளில் சுமார் ரூ.10 லட்சம் கோடி வாராக்கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மாநிலங்களவையில் நேற்று ஒரு கேள்விக்கு பதில் அளித்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-
வங்கிகள் தங்கள் இருப்புநிலை ஏட்டை சரிசெய்யும் விதமாகவும், வரிப்பயனை பெறும் வகையிலும், முதலீட்டை அதிகரிக்கும் வகையிலும் தங்களின் வழக்கமான நடவடிக்கையின் ஒரு அங்கமாக வாராக்கடன்களை தள்ளுபடி செய்கின்றன. வங்கிகளின் நிர்வாக இயக்குனர்கள் குழு ஒப்புதல் அளித்த கொள்கை அடிப்படையிலும், ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலின்படியும் இது மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி, ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கும் தகவல்படி, கடந்த 5 நிதியாண்டுகளில் ரூ.10 லட்சத்து 9 ஆயிரத்து 511 கோடி வாராக்கடன்களை பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள் ரத்து செய்துள்ளன. வாராக்கடன்கள் ரத்து செய்யப்பட்டாலும் அவற்றை திரும்ப வசூலிப்பதற்கான சட்ட நடவடிக்கை போன்றவை தொடரும். வணிக வங்கிகள் கடந்த 5 நிதியாண்டுகளில் ரூ.1 லட்சத்து 32 ஆயிரத்து 36 கோடி வாராக்கடன்கள் உள்பட ரூ.6 லட்சத்து 59 ஆயிரத்து 596 கோடி கடன்களை மீட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.