பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுலுடன் ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் பங்கேற்பு!

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் இணைந்துள்ளார் ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன்.

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் நோக்கிலும், மத்திய பாஜக அரசில் அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மை உள்ளிட்டவை கண்டித்தும் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரி தொடங்கி ஜம்மு -காஷ்மீர் வரையிலான நீண்ட நெடிய அவரது இந்த பாத யாத்திரை விரைவில் 100 நாட்களை எட்ட உள்ளது. தமிழ்நாடு , கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களை கடந்து தற்போது ராஜஸ்தான் மாநிலத்தை அடைந்துள்ளது.

தலைநகர் ஜெய்ப்பூரில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் புடைசூழ வீறுநடை போட்டு வந்த ராகுல் காந்தியுடன் இன்று கை்கோர்த்தார் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன். ராஜஸ்தானின் சுவாமி மதொபூர் பகுதியில் ராகுல் காந்தியுடன் பாதயாத்திரையில் இணைந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளார் ரகுராம் ராஜன். அண்மையில் நடைபெற்ற ஹிமாசல் பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு, ராகுல் காந்தியின் பாதயாத்திரை மிக முக்கியமான காரணம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறிய நிலையில், அவரது நடைபயணத்தில் இணைந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளார் ரகுராம் ராஜன்.

காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலும், அதற்கு பிந்தைய பாஜக ஆட்சியிலும் ரிசர்வ் வங்கி கவர்னராக பதவி வகித்த ரகுராம் ராஜன், மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு 2016 நவம்பர் 8 ஆம் தேதி, நாடு முழுவதும் அதிரடியாக அமல்படுத்திய பணமதிப்பு இழப்பு நடவடிக்கையை கடுமையாக எதிர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.