ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா இன்னும் அமலுக்கு வராத நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சமீபத்தில் தமிழ்நாடு அரசு மூலம், தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிப்பது குறித்து அவசர சட்டம் பிறப்பிப்பது தொடர்பாக ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அதில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை முறைப்படுத்த இயலாது என்பதால் தடை செய்ய வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டது. இதையடுத்து தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி போன்ற ரம்மி கேம்களை தடை செய்வதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த அவசர சட்டம் கொண்டு வரப்பட்டு அதன்பின் சட்டசபையில் அக்டோபர் 19ம் தேதி நிறைவேற்றப்பட்டது. இந்த அவசர தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில், அவர் இன்னும் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. ஆன்லைன் தடை சட்டத்தை ஆளுநர் ஆர். என் ரவி டெல்லிக்கு அனுப்பாத நிலையில் அந்த அவசர சட்டம் காலாவதி ஆகி உள்ளது.
ஆளுநர் ஆர். என் ரவி இந்த மசோதாவை டெல்லிக்கு அனுப்பவில்லை. ஆன்லைன் ரம்மி தடை மசோதா தொடர்பாக சில சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்டு தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் ரவி கடிதம் எழுதி இருந்தார். இதற்கு தமிழ்நாடு அரசும் உடனடியாக பதில் அனுப்பியது. ஆனாலும் அதன்பின்பும் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. அதனால் இந்த சட்டம் காலாவதி ஆகி உள்ளது. அவசர சட்டம் காலாவதியான நிலையில் மசோதா மட்டும் நிலுவையில் உள்ளது.இந்த நிலையில்தான் ஆளுநர் ஆர்.என்.ரவியை ஆன்லைன் விளையாட்டு கூட்டமைப்பின் நிர்வாகிகள் சந்தித்ததாக கூறப்பட்டது. ஆனால் இந்த சந்திப்பு உண்மையில் நடைபெற்றதா என்று தெரியவில்லை. சந்திப்பில் என்ன பேசப்பட்டது என்பது தொடர்பான விவரங்களும் வெளியாகவில்லை. ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிலுவையில் இருக்கும் நிலையில் ஆளுநரின் சந்திப்பு தொடர்பாக வெளியான இந்த உறுதிப்படுத்தப்படாத செய்திகள் கடும் விமர்சனங்களை சந்தித்தன. முக்கியமாக திமுக நிர்வாகிகள் பலர் இது தொடர்பாக கடுமையான விமர்சனங்களை வைத்து இருந்தனர்.
இந்த நிலையில்தான் ஆன்லைன் சூதாட்டம் காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூர் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டு உள்ளார். 21 வயதான வினோத் குமார் ஆன்லைன் சூதாட்டத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மம்சாபுரம் என்று பகுதியில் உரக்கடை வைத்திருப்பவர் தனசேகரன். இவரின் மகன் வினோத் குமார் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் மதுரையில் படித்து வந்துள்ளார். விடுதியில் தங்கி படித்து வந்த இந்த மாணவர் ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி உள்ளார். இதில் பணத்தை இழந்த நிலையில், நேற்று தன்னுடைய விடுதியில் இருக்கும், காலி அறை ஒன்றில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரின் போனை பறிமுதல் செய்து தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது கடந்த 48 மணி நேரத்தில் நடக்கும் இரண்டாவது தற்கொலை ஆகும்.
நேற்று முதல்நாள் கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள உப்பிலிபாளையம் பகுதியில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். ஆர்.எல்.வி. நகரை சேர்ந்த சங்கர் என்ற 29 வயது இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். ஆன்லைன் ரம்மியில் பல லட்சங்களை இழந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. பலரிடம் கடன் வாங்கி இவர் விளையாடி இருக்கிறார். தொடக்கத்தில் பணத்தை வென்றவர், அதன்பின் லட்சம் லட்சமாக இழந்துள்ளார். எப்படியாவது இழந்த காசை மீட்டு விடலாம் என்று மேலும் மேலும் கடன் வாங்கி ஆடி இருக்கிறார். ஆனால் மேலும் மேலும் பணத்தை இழந்து பல லட்சங்களுக்கு நஷ்டம் அடைந்து உள்ளார். சமீபத்தில் ஆன்லைன் அவசர சட்டம் காலாவதியான அதே நாளில் சென்னையில் ஒரு பெண் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடைபெற்றது. தமிழ்நாட்டிலும் சென்னையில் ஐடி ஊழியர், கல்லூரி மாணவர், அதன்பின் கோவையில் ஒருவர் என்று பலர் மரணம் அடைந்துள்ளனர்.