எதிர்க்கட்சிகள் ஊழலுக்காகவே செயல்படுகின்றன: ஜே.பி.நட்டா

எதிா்கட்சிகள் ஊழலுக்காகவே செயல்படுகின்றன என்பதையும் மக்களிடம் தெரிவிக்க வேண்டும் என்று பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறினார்.

கர்நாடகத்தில் கொப்பல், பல்லாரி, ராய்ச்சூர், பீதர், விஜயாப்புரா, பாகல்கோட்டை, கோலார், சாம்ராஜ்நகர், ஹாவேரி மற்றும் கதக் ஆகிய 10 மாவட்டங்களில் பா.ஜனதா கட்சியின் அலுவலக கட்டிடங்கள் புதிதாக கட்டப்பட்டுள்ளன. இதன் திறப்பு விழா கொப்பலில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று கர்நாடகம் வந்தார். தனி விமானம் மூலம் கொப்பலுக்கு வந்த அவர், விழாவில் கலந்துகொண்டு 10 மாவட்டங்களின் புதிய கட்சி அலுவலகங்களை திறந்து வைத்தார். கொப்பலில் இருந்தபடி மற்ற 9 மாவட்ட கட்சியின் அலுவலகங்களை காணொலி மூலம் அவர் திறந்து வைத்தார். இந்த விழாவில் ஜே.பி.நட்டா பேசியதாவது:-

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா ஆட்சியில் பெண்கள் பொருளாதார ரீதியாக பலம் அடைந்து வருகிறார்கள். கர்நாடகத்தில் எடியூரப்பா ஆட்சியிலும் சரி, தற்போது பசவராஜ் பொம்மை தலைமையிலான ஆட்சியிலும் சரி, பெண்கள் முன்னேற்றம் அடைந்து வருகிறார்கள். நாட்டில் கிராமப்புறங்களில் 12 கோடிக்கும் அதிகமான தனிநபர் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. ஆயுஸ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையில் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. கர்நாடகத்தில் விவசாயிகளின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. நாட்டின் புதிய கல்வி கொள்கை முதல் முறையாக கர்நாடகத்தில் தான் அமல்படுத்தப்பட்டுள்ளது. கஷ்டத்தில் உள்ள அனைவருக்கும் பா.ஜனதா அரசு உதவிகளை செய்துள்ளது. மத்தியிலும், மாநிலத்திலும் பா.ஜனதா அரசுகள் செய்த சாதனையை முன்வைத்து கர்நாடக சட்டசபை தேர்தலை எதிர்கொள்வோம்.

பா.ஜனதா சமுதாயத்தில் அனைத்து தரப்பு மக்களின் மேம்பாட்டிற்கும் பாடுபடுகிறது. அதற்கான திட்டங்களை வகுத்து செயல்படுத்துகிறது. நமது தொண்டர்கள் இதை மக்களுக்கு எடுத்து கூற வேண்டும். எதிா்கட்சிகள் ஊழலுக்காகவே செயல்படுகின்றன என்பதையும் மக்களிடம் தெரிவிக்க வேண்டும். ராகுல் காந்தி கர்நாடகத்தில் ஒற்றுமை யாத்திரையை நடத்தினார். நாட்டை உடைத்தவர்கள் காங்கிசின் தலைவர்களே. அந்த தவறுக்காக ராகுல் காந்தி யாத்திரையை நடத்துகிறார். அதனால் அது ஒற்றுமை யாத்திரை அல்ல. தேசத்துரோகிகளை உடன் சேர்த்து கொண்டு அவர் யாத்திரை மேற்கொள்கிறார். வளர்ச்சி என்பது காங்கிரஸ் தலைவர்களுக்கு தெரியாது. ஊழலே காங்கிரசின் பின்னணி மற்றும் வரலாறு. அதே வரலாற்றை கர்நாடகத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர்களுக்கும் இருக்கிறது. பா.ஜனதாவை மீண்டும் ஆதரித்தால் நாங்கள் அனைத்து தரப்பினரின் மேம்பாட்டிற்கும் பாடுபடுவோம்.

கொரோனாவின் பிடியில் இருந்து சீனா இன்னும் விடுபடவில்லை. ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவிலும் இதே நிலை தான் உள்ளது. ஆனால் இந்தியாவில் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கி கொரோனா இல்லாத இந்தியாவை நாங்கள் உருவாக்கியுள்ளோம். சித்தராமையா கர்நாடகத்தின் வளர்ச்சிக்காக என்ன செய்தார்?. அவரிடம் இதற்கு பதில் உள்ளதா?. வந்தே பாரத் ரெயில் நாட்டின் வளர்ச்சியை எடுத்து கூறுகிறது. பெங்களூரு சர்வதேச விமான நிலையம் உலக தரத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளது. புதிய மங்களூரு துறைமுகம் மேம்படுத்தப்பட்டுள்ளது. காஷ்மீரில் 370-வது ஷரத்து ரத்து செய்யப்பட்டது, லால்சவுக்கில் தேசிய கொடியை ஏற்றியது போன்றவற்றை பா.ஜனதா செய்துள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுகிறது. நாங்கள் கட்சியை ஒரு குடும்பமாக கருதுகிறோம். ஆனால் பிற கட்சிகள் குடும்பமே கட்சி என்று கருதி செயல்படுகின்றன.

ஜி20 நாடுகள் சபையின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இது நமது நாட்டிற்கு பெருமை அளிக்கும் விஷயம் ஆகும். கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர், அனைத்து மாவட்டங்களிலும் கட்சி அலுவலம் கட்டப்பட வேண்டும் என்று கூறினர். அதற்கேற்ப நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கட்சி அலுவலகங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று (நேற்று) கர்நாடகத்தில் கொப்பல் உள்பட 10 மாவட்டங்களில் கட்சி அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. விஜயநகர், குடகு, உத்தரகன்னடா ஆகிய 3 மாவட்டங்களில் அலுவலகம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இவ்வாறு ஜே.பி.நட்டா பேசினார். இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, மேலிட பொறுப்பாளர் அருண்சிங், மாநில தலைவர் நளின்குமார் கட்டீல், முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா உள்பட மந்திரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.