மத்திய சட்டத்துறை அமைச்சருக்கு சட்டம் பற்றியும், நீதிபதிகளின் பணிகள் குறித்தும் எதுவுமே தெரியவில்லை என மூத்த வழக்கறிஞரும், காங்கிரஸ் பிரமுகருமான கபில் சிபல் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் சட்டத்துறை அமைச்சராக இருப்பவர் கிரண் ரிஜூஜூ. இவர் சமீபத்தில் கொலிஜியம் முறையை விமர்சனம் செய்திருந்தார். இந்தியாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலிஜியம் தான் உயர்நீதிமன்றங்களின் நீதிபதிகளை பரிந்துரை செய்கின்றன. இந்த கொலிஜியத்தின் பரிந்துரையில் தான் மத்திய அரசு நீதிபதிகள் நியமனம் செய்கிறது. இந்நிலையில் தான் இந்த பரிந்துரையில் ஒரு தலைபட்சம் இருப்பதாகவும், உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்களுக்கு பிடித்தவர்களை நீதிபதியாக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வதாகவும் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ விமர்சனம் செய்திருந்தார். மேலும் இந்த முறையை மாற்றம் செய்யப்பட வேண்டும் என தொடர்ந்து கூறி வருவதோடு, அதற்கான செயல்பாட்டிலும் இறங்கி உள்ளார்.
இந்நிலையில் தான் தற்போதைய நாடாளுமன்ற கூட்டத்தில் நீதித்துறை நியமனங்கள் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார். இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். மத்திய சட்டத்துறை அமைச்சருக்கு எதவுவே தெரியவில்லை என அவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுபற்றி கபில் சிபல் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-
சட்ட அமைச்சர் ரிஜூஜூ கருத்து துரதிர்ஷ்டவசமானது, சட்டத்தை பற்றியும், நீதிபதிகளின் வேலைகள் பற்றியும் அறியாத ஒருவர் நமக்கு சட்ட அமைச்சராக இருக்கிறார். புதிய சட்டங்கள் கொண்டு வரும்போது சட்ட அமைச்சர் கடுமையாக உழைத்தால் நாட்டின் சட்டத்துறை சிறப்பாக செயல்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கபில் சிபல் மூத்த வழக்கறிஞராக உள்ளார். இவர் காங்கிரஸ் கட்சியில் அங்கம் வகிக்கிறார். மக்களவை, மாநிலங்களவை எம்பியாக இருந்துள்ளார். மேலும் கூடுதல் சொலிசிடைர் ஜெனராலாகவும் பணியாற்றி இவர் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவராக மூன்று முறை பொறுப்பேற்றுள்ளார். மேலும் கடந்த 2009ம் ஆண்டில் டெல்லி சாந்தினிசவுக் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்பியானார். அப்போது பிரதமராக இருந்த மன்மோகன்சிங் அமைச்சரவையில் தொலைதொடர்பு, தகவல் தொழில்நுட்பம், மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்தார். கடந்த 2014 தேர்தலில் மீண்டும் அந்த தொகுதியில் போட்டியிட்டு பாஜகவின் ஹர்ஷவர்தனிடம் தோல்வியடைந்தார். இவர்பல்வேறு முக்கிய வழக்குகளில் வாதாடி வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.