மாணவர்களிடையே போதைப்பொருள் பழக்கத்தை ஒழிக்க நடவடிக்கை: அன்பில் மகேஷ்

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாணவர்களிடையே போதைப்பொருள் பழக்கத்தை ஒழிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.

ஈரோட்டில் பள்ளிக்கல்வித் துறை சார்பில், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின், புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் தன்னார்வல ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் தொடக்க விழா நடந்தது. இதில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அப்போது மாநில கல்விக் கொள்கை தொடர்பாக அவர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:-

பள்ளிகளில் ஆசிரியர்கள் விளையாட்டு வகுப்பு நேரத்தில், மாணவர்களை விளையாட அனுமதிக்க வேண்டும். விளையாட்டு வகுப்பு நேரத்தில் மற்ற மாடங்களை எடுக்கக் கூடாது. இது தொடர்பாக ஆசிரியர்களை அறிவுறுத்தியுள்ளோம். தமிழ்நாட்டை இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக மாற்ற வேண்டும் என்பதில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி உறுதியாக உள்ளார். அதற்கான நடவடிக்கைகளை அவர் எடுப்பார். பள்ளி மாணவ, மாணவியருக்கு 24 வகையான விளையாட்டுகளில், வட்டார, மாவட்ட, மாநில அளவிலான 208 விதமான போட்டிகள் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இத்தகைய விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதன் மூலம், மாணவர்கள் மத்தியில் ஒரு உத்வேகம் ஏற்படும். போட்டிகளில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்று நினைத்து மாணவர்கள் களமிறங்குவார்கள். இந்த விஷயத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் வழங்கும் ஆலோசனைகளை ஏற்று அதற்கேற்ப திட்டங்களைச் செயல்படுவோம்.

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள குழு, துறை சார்ந்த வல்லுநர்களிடம் கருத்துகளைப் பெற்று வருகின்றனர். இந்த குழு வரும் ஜனவரி மாதத்தில் தங்கள் அறிக்கையை அளிக்க உள்ளனர். இந்த பணிகள் டிசம்பர் மாதம் முடிவடையும். வரும் ஜனவரியில் இந்த அறிக்கையைத் தமிழக அரசுக்குச் சமர்ப்பிக்க உள்ளோம். அதன் அடிப்படையில் முதல்வர் இந்த விவகாரத்தில் இறுதி முடிவை எடுப்பார்.

மாணவர்களிடையே போதைப் பழக்கத்தைத் தடுக்க வேண்டும் என்பதற்காக முதல்வர் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியுள்ளார். போதைப்பொருள் தொடர்பான விழிப்புணர்வு பள்ளிகளில் இருந்தே தொடங்கப்பட வேண்டும் என்பதே வல்லுநர்களின் கருத்தாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுகவினர் இதைக் கண்டு கொள்ளவில்லை. இதன் காரணமாக இது இவ்வளவு பெரிய பிரச்சினையாக தற்போது உருவெடுத்துள்ளது. இருந்த போதிலும் மாணவர்கள் மத்தியில் இருக்கும் போதைப் பொருள் பழக்கத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காக நமது முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். போதைப் பொருள் இல்லாத ஒரு மாநிலமாகத் தமிழகத்தை மாற்ற நம் முதல்வர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். போலீசாரும் கூட இந்த விவகாரத்தில் தக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

எல்லாருக்கும் எல்லாம் என்ற திராவிடமாடல் ஆட்சியில், எல்லாருக்கும் எழுத்தறிவு என்பதுதான் பள்ளிக் கல்வித்துறையின் திட்டமாக, நோக்கமாக உள்ளது. தமிழ்நாட்டில் இந்தாண்டு புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் 4.8 லட்சம் பேருக்கு எழுத்தறிவு கற்பிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில் ஈரோடு மாவட்டத்திற்கு மட்டும் 23,598 என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு இத்திட்டத்தின் மூலம் 3.10 லட்சம் பேர் பயன் பெற்றனர். இந்தாண்டு அதைத் தாண்டி பலரும் நிச்சயம் பயன் பெறுவார்கள். தமிழ்நாட்டில் ஒருவர் கூட கல்லாதவர் இல்லை என்ற நிலையை உருவாக்குவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.