ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எந்த பொருளுக்கும் வரி உயர்வில்லை: நிர்மலா சீதாராமன்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், எந்தப் பொருளுக்கும் வரி உயர்த்தப்படவில்லை.

ஜிஎஸ்டியின் 48 வது கவுன்சில் கூட்டம் டெல்லியில் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்தது. வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக இந்த கூட்டம் நடந்தது. மாநில நிதியமைச்சர்கள், நிதித்துறை செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு பிறகு நிர்மலா சீதாராமன் நிருபர்களிடம் கூறியதாவது:-

15 விஷயங்கள் குறித்து ஆலோசிக்க முடிவு செய்யப்பட்ட நிலையில் போதிய நேரமின்மை காரணமாக 8 விஷயங்கள் குறித்து மட்டுமே ஆலோசித்து முடிவு செய்யப்பட்டது. எந்த ஒரு பொருள் மீதும், சேவை மீதும் தற்போதுள்ள வரியை கூடுதலாக்க வேண்டாம் என்ற முடிவு எடுக்கப்பட்டது. புது வரி விதிப்பு இருக்காது. சட்டப்படி குற்றமாக கருதப்பட்ட நிதி சார்ந்த சில செயல்களை குற்றமாக கருதத் தேவையில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

வருவாய்த்துறை செயலாளர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறுகையில், ஆன்லைன் விளையாட்டுகள் மற்றும் சூதாட்டங்களுக்கு ஜிஎஸ்டி விதிப்பது குறித்த மேகாலயா மாநில நிதியமைச்சர் தலைமையிலான குழு 2 நாட்களுக்கு முன்னர் தான் அறிக்கை சமர்ப்பித்தது. இது குழு உறுப்பினர்களுக்கு இன்னும் அனுப்பி வைக்கப்படவில்லை. இதனால், இந்த விவகாரம் ஜிஎஸ்டி கவுன்சில் ஆலோசனை செய்யவில்லை. ஜிஎஸ்டி.,யில் வழக்கு தொடர்வதற்கான வரம்பை ரூ.1 கோடியில் இருந்து ரூ.2 கோடியாகவும் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.