பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டில் சிறந்த நடிகர் யார் என்ற கேள்விக்கு, தமிழக முதல்வர் எனக் கூறியுள்ளார்.
கோவை மாவட்டம் அன்னூரில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் டிப்போ மூலம் புதிய தொழில் பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டது. இருப்பினும், தொழிற் பூங்கா அமைக்க விவசாய நிலங்களைக் கையகப்படுத்தக் கூடாது என விவசாயிகள் அரசியல் கட்சிகள் வலியுறுத்தினர். இதையடுத்து ஏற்கனவே தனியார் நிறுவனங்களிடம் உள்ள 1,630 ஏக்கர் தரிசு நிலங்கள் மட்டுமே தொழில் பூங்காவுக்குப் பயன்படுத்தப்படும் என்றும் விவசாயிகள் தாங்களாக முன்வந்து நிலத்தைக் கொடுத்தால் தகுந்த இழப்பீடு வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்தது.
இந்தச் சூழலில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இது குறித்து கூறியதாவது:-
விவசாய நிலங்களைக் கைப்பற்றுவது குறித்து முதலில் ஒரு அரசாணையை வெளியிட்டிருந்தார்கள். இதற்கு பாஜக சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. விவசாயிகள் பலர் இதில் கலந்து கொண்டனர். இப்போது மாநில அரசு தனது முடிவை மாற்றியுள்ளது. இப்போது தனியார் நிறுவனங்களிடம் ஏற்கனவே உள்ள 1630 ஏக்கர் தரிசு நிலங்களை மட்டுமே தொழிற் பூங்காவுக்கு வாங்க உள்ளதாக அறிவித்துள்ளனர். மேலும், விவசாயிகள் விருப்பப்பட்டால் மட்டுமே வாங்கிக் கொள்வோம் என்றும் கூறியுள்ளனர். மாநில அரசு இப்போது தான் அவர்களின் கடைமை உணர்ந்துள்ளனர்.
தொழிற்சாலைகள் வருவதை பாஜக எதிர்க்கவில்லை. ஆனால், விவசாய நிலத்தை அழித்து தொழிற்சாலைகள் வரக் கூடாது என்பதே எங்கள் கருத்து. இப்போது, தமிழ்நாடு முழுக்க அரசிடம் 48 ஆயிரம் ஏக்கர் நிலம் தொழிற்பேட்டைக்காகக் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. இதில் தொழிற் பூங்காக்களை அமைக்கலாம். குறிப்பாகத் தென்தமிழகத்தில் வேலைவாய்ப்பை அதிகப்படுத்தும் தொழிற்சாலைகளை அமைக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. விவசாய நிலங்களை அரசு பாதுகாக்கவே வேண்டும். தவறாகக் கொடுக்கப்பட்ட முதல் அரசாணையைத் திரும்பப் பெற வேண்டும். அரசாணை மூலம் விவசாயிகளை எந்த வகையிலும் நிர்ப்பந்தம் செய்யக்கூடாது. நீர், நிலத்தை மாசுபடுத்தாத நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கும் என அரசு தெரிவித்துள்ளது. அதனை திமுக காப்பாற்ற வேண்டும். அரசு அறிவிப்பை மீறினால் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். இந்த விவகாரத்தில் எனக்கும் அ.ராசாவுக்கும் தனிப்பட்ட முறையில் எந்த பிரச்சினையும் இல்லை. கோவை பகுதியில் கிடைக்கும் நீருக்காகவே நிறுவனங்கள் அங்கு வருகிறார்கள். யாரும் நிலத்திற்காக வரவில்லை. இதை அ.ராசா புரிந்து கொள்ள வேண்டும். கோவை கிணத்துக்கடவு பகுதிகளில் கனிமவள கொள்ளை அதிகரித்துள்ளது. இந்த விவகாரத்தில் பாஜக தொடர் போராட்டங்களைக் கையில் எடுக்கும்.
திமுக அரசின் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். ஒவ்வொரு நாளும் விலைவாசி உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அமுல் நிறுவனத்தில் வரும் லாபத்தில் 82 சதவிகிதம் விவசாயிகளுக்குச் செல்கிறது. ஆவின் நிறுவனம் அப்படி நடந்துகொள்ளவில்லை. ஆவின் நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தில் சென்று கொண்டிருக்கிறது. திமுக அமைச்சர் ஒருவருக்குச் சாதமாக இருக்கவே இப்படிச் செய்கிறார்கள்.
கோவை கார் வெடிவிபத்தில் இப்போது வரை என்ஐஏ விசாரணை திருப்திகரமாக உள்ளது. உதயநிதி அமைச்சரான பிறகு திமுகவினர் அவரை புகழ்ந்து பல்வேறு கருத்துக்களைக் கூறி வருகின்றனர். அதிலும் திமுக அமைச்சர்களுக்கு உதயநிதியை புகழ்வதுதான் ஒரே வேலை. உதயநிதிக்கு திரைத்துறை சார்ந்த அமைச்சகம் தான் பொருத்தமாக இருக்கும். தமிழ் சினாமாவில் அதிகாரம் விளையாடுகிறது. இங்குத் தமிழகத்தில் மற்ற சினிமா தயாரிப்பாளர்கள் பிழைக்க வேண்டுமா, வேண்டாமா?
தமிழ்நாட்டில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மத்தியப் பிரதேசத்திற்குச் சென்ற கோவை போலீசார் பிடித்துள்ளனர். தமிழக காவல்துறை மிகவும் புத்திசாலித்தனமானது. ஆனால், அவர்களை முழுமையாகச் செயல்பட விடாமல், காவல்துறையின் கைகள் அரசு கட்டிப் போடப்பட்டுள்ளது. அடுத்து தமிழ்நாட்டில் கூட்டணி எப்படி இருக்கும் எனப் பலரும் பேசி வருகிறார்கள். கூட்டணி குறித்து கட்சித் தலைவர்கள் பேசினால் பொருத்தமாக இருக்கும். பாஜக அரசியலில் இருப்பது தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே. 2024 தேர்தல் பிரதமர் மோடிஜிக்கான தேர்தல். இதில் மக்கள் தங்கள் முடிவைச் சொல்வார்கள்.
ரபேல் விமானத்தின் பாகங்களில் இருந்து 500 கைக்கடிகாரங்கள் செய்யப்பட்டது. அதில் ஒன்றை நான் வாங்கியுள்ளேன். 149ஆவது கடிகாரம் என்னுடையது. நான் தேசியவாதி.. என் உயிர் உள்ளவரை இந்த கடிகாரம் என் கையில் இருக்கும். மேலும் அதிமுக உட்கட்சி பிரச்சனையில் பாஜக எப்போதும் தலையிடாது.. இப்போதெல்லாம் பாஜகவைப் பற்றி பேசிதான் திமுக வண்டி ஓடுகிறது. ஆரிய – திராவிடம் என்கிற பிரிவினையை ஏற்காதவன் நான். தமிழக அரசின் டேண்- டீ ஆரம்பித்தது லாப நோக்கிற்காக அல்ல.. இலங்கையில் இருந்து வந்த மலையக தமிழர்களின் நலனுக்காகத் தொடங்கப்பட்டது. அ. ராசா அதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.
பாஜக சார்பில் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஒன்பது முக்கிய புகார்களைக் கொடுத்துள்ளோம். இருப்பினும், அரசின் அழுத்தத்தால் வழக்குகள் எதுவும் பதிவு செய்யப்படுவதில்லை. அரசு அழுத்தம் காரணமாகவே நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள். நாங்கள் வெறும் பேச்சுக்காக மட்டும் குற்றஞ்சாட்டுவதில்லை. புகாரும் தருகிறோம். ஆனால், அதில் நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள். அ. ராசா இன்னுமே 2ஜி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர் தான். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அப்போது அங்கிருந்த செய்தியாளர் ஒருவர் தமிழ்நாட்டின் சிறந்த நடிகர் யார் என்று கேட்டார். அதற்கு அண்ணாமலை, “தமிழகத்தின் நம்பர் ஒன் நடிகர் தமிழக முதல்வர் ஸ்டாலின் தான்” என்று திடீரென கூறினார். நடிகர் குறித்த கேள்விக்கு அண்ணாமலை கூறிய பதிலால் அங்குச் சலசலப்பு ஏற்பட்டது.