ஆளுநர் இல்லை என்றால் மக்களுக்கு பல நன்மைகள் செய்ய முடியும் என பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் கனிமொழி எம்பி பேசியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் வண்டிமேடு பகுதியில் உள்ள வ.உ.சி திடலில் நடைபெற்றது. சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில், திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது கனிமொழி பேசியதாவது:-
எங்கெல்லாம் பாஜக ஆட்சியில் இல்லையோ அங்கெல்லாம் ஆளுநரை நியமித்துவிடுகிறார்கள். ஆளுநர்கள் தான் ஆளுநர் என்பதை மறந்து கட்சியில் இருப்பவரை போல, ஆர்.எஸ்.எஸ்-ல் இருப்பதைப் போல மேடைகளில் பேசி வருகிறார். ஆன்லைன் ரம்மியால் பல குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. மேலும் பலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இதனை தடை செய்ய தான் சட்டம் இயற்றினோம். ஆனால் ஆளுநர் அனுமதி அளிக்கவில்லை. அமைச்சர்கள் மூலம் இதுகுறித்து பலமுறை ஆளுநருக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் ரம்மி தொடர்பான சட்டத்தை பல மாதங்கள் கையில் வைத்துக் கொண்டு, என்னென்ன வகையில் தமிழக அரசுக்கு பிரச்சினைகளை உருவாக்க முடியும் என்றும், மக்களுக்கு நன்மை செய்து விடக்கூடாது என்பதற்காகவும் ஆளுநர் நியமிக்கப்பட்டு உள்ளாரோ என்று எண்ணக்கூடிய அளவிற்கு இந்த நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது.
கவர்னர் பதவி என்பது தேவையில்லாத ஒன்று என பல ஆண்டுகளாக சொல்லி வருகிறோம். ஆளுநர் இல்லை என்றால் மக்கள் பணியை இன்னும் சிறப்பாக செய்ய முடியும். ஒன்றிய அரசு ஒவ்வொரு முறை இந்தியை திணிக்க முயற்சிகள் எடுக்கும் போதும், முதல் எதிர்ப்பு குரல் தமிழகத்தில் இருந்து எழக்கூடிய ஸ்டாலின் குரலாக உள்ளது. வடக்கில் இருந்து வரக்கூடிய இந்தியா டுடே என்கிற பத்திரிக்கை இந்தியாவிலேயே மிகச் சிறந்த மாநிலமாக தமிழகத்தை தேர்வு செய்துள்ளது.
திராவிட ஆட்சி என்ன செய்தது என கேட்கிறார்கள். திராவிட மாடல் ஆட்சி தான் இந்தியாவிலேயே முதல் இடத்தில் உள்ளது. முதல் ஐந்து மாநிலங்களில் பாஜக ஆட்சி செய்யும் குஜராத் மட்டுமே இடம் பெற்றுள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் பாஜக ஆட்சியில் உள்ளது. பல மாநிலங்களில் பல கட்சிகளை உடைத்து ஆட்சியை உருவாக்குகிறது. ஆனால் ஏன் சிறந்த மாநில பட்டியலில் இடம் பெற முடியவில்லை.
தமிழ்நாட்டில் தான் மருத்துவமும், கல்வியும் சிறப்பாக உள்ளது என இந்தியா டுடே பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இதில் பாஜக மாநில ஆட்சி செய்யும் ஒரு மாநிலம் கூட இடம்பெறவில்லை. புதிய கல்வி கொள்கையை புகுத்த நினைக்கும் மத்திய அரசாங்கம் அதன் மூலம் நம் கல்லூரியில், நம் வரி பணத்தில் கட்டபட்ட கல்லூரியில் தேர்வை வைத்து எங்கள் பிள்ளைகளை சோதிக்க நீங்கள் யார்?. இது பெரியார் மண். சூடு தனியாத தமிழ்நாடு எங்கள் தமிழ்நாடு. மக்களை மதத்தின் பெயரால், ஜாதியின் பெயரால் பிரித்து பார்க்கும் அரசாங்கம் மாநில அரசுக்கு நிதி வழங்குவதில்லை. ஆனாலும் மக்களுக்கு தேவையான திட்டங்களை மாநில அரசு செய்து வருகிறது. எடுத்துக்காட்டாக இலவச பேருந்து பயணம் உள்ளிட்டவை.
அதிமுகவில் இருக்கக்கூடியவர்கள் மத்திய அரசு சொல்ல கூடிய அனைத்து விஷயங்களையும் ஆட்சியில் இருக்கும் போதும், தற்போது ஆட்சியில் இல்லாத போதும் அவர்கள் வழியை பின்பற்றுகிறார்கள். விவசாயத்திற்கு எதிராகவும், தமிழகத்துக்கு எதிராகவும் மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தால் அதை எதிர்க்க அதிமுகவுக்கு துணிவும் இல்லை, திராணியும் இல்லை. மீண்டும் அதிமுகவுக்கு நாடாளுமன்றத் தேர்தலிலே மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். முன்னேறிய நாடுகளில் கூட சாமானிய மக்களுக்கு மருத்துவம் பார்பதற்கு மிக சிரமம். ஆனால் தமிழ்நாட்டில் மக்களை தேடி மருத்துவம் என்னும் திட்டத்தை உருவாக்கி உள்ள ஆட்சி திராவிட மாடல் ஆட்சி. தமிழகத்தில் என்றும் நிலையான ஆட்சியை தருவோம். இவ்வாறு அவர் பேசினார்.