அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்ற ரோப் கார் மின்சார தடையால் பாதி வழியில் அந்தரத்தில் தொங்கியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அறுபடை வீடுகளில் ஒன்றான திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். அவர் மலைக்கோயிலுக்கு மேலே செல்வதற்காக அடிவாரத்தில் இருந்து ரோப் கார் மூலமாகச் சென்றார். அப்போது திடீரென மின்தடை ஏற்பட்டது. இதனால் மேலே சென்ற ரோப் கார் பாதியிலேயே அந்தரத்தில் தொங்கியபடி நின்றது. ரோப் காரில் நிதியமைச்சருடன், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் உள்ளிட்ட அரசு அலுவலர்களும் உடன் இருந்தனர். இரண்டு நிமிடத்துக்கு பிறகு மின்சாரம் வந்தவுடன் மீண்டும் ரோப் கார் இயக்கப்பட்டது. இதையடுத்து, மலைக்கோயிலுக்கு சென்ற நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பழனிமுருகனை தரிசனம் செய்தார். அவருக்கு திருக்கோயில் சார்பில் பிரசாதம் வழங்கபட்டது. சாமி தரிசனம் முடிந்த பின்னர் மீண்டும் ரோப் கார் வழியாகவே அமைச்சர் கீழே இறங்கினார்.
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்ற ரோப் கார் மின்சார தடையால் பாதி வழியில் அந்தரத்தில் தொங்கியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக அமைச்சர்கள் வெளியே செல்லும் போது, மின்தடை ஏற்பட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது. முன்னதாக சில வாரங்களுக்கு முன்பு, சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போத 3ஆம் தளத்தில் இருந்து கீழே வந்து கொண்டிருந்த போது, மின்தடை ஏற்படவே அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் லிப்ட்டிலேயே சிக்கிக் கொண்டனர். இதையடுத்து அவர்கள் ஆபத்துக் கால கதவு மூலம் மீட்கப்பட்டன. இந்த விவகாரத்தில் இரு ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நடந்து சில வாரங்களில் இப்போது அமைச்சர் பிடிஆரும் மின்தடையால் ரோப் காரில் அந்தரத்தில் சிக்கிக் கொண்டார்.