உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வென்ற அர்ஜென்டினா அணிக்கு உலகெங்கும் இருந்து பலரும் பாராட்டி வருகின்றனர். அதன்படி முதல்வர் ஸ்டாலினும் சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினா அணியைப் பாராட்டியுள்ளார்.
கடந்த மாதம் தொடங்கிய உலகக் கோப்பை திருவிழா மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது. மொத்தம் 32 நாடுகள் களமிறங்கிய இந்த உலகக் கோப்பையில் அர்ஜென்டினா – பிரான்ஸ் அணிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன. இந்திய நேரப்படி நேற்றிரவு நடந்த இறுதிப் போட்டியில் முதல் பாதியில் அர்ஜெண்டினா இரு கோல்களை அடித்தது. இருப்பினும், 80, 81ஆவது நிமிடங்களில் பிரான்ஸ் அடுத்தடுத்து கோல் அடித்து கம்பேக் கொடுத்தது. ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா 2 கோல்களை அடித்திருந்தது. இதையடுத்து கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. அதில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இரண்டாம் பாதியில் மீண்டும் இரு அணிகளும் கோல் அடிக்க போட்டி மீண்டும் சமனில் முடிந்தது. வெற்றியாளரைத் தேர்வு செய்ய பென்லாடி ஷூட் அவுட் கடைப்பிடிக்கப்பட்டது. அதில் 4-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா உலகக்கோப்பை வென்றது. அர்ஜென்டினா வெற்றியை அந்நாட்டு ரசிகர்களும் மெஸ்ஸி ரசிகர்களும் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர்.
அதேபோல உலகக் கோப்பை வென்ற அர்ஜென்டினா அணிக்கு உலகெங்கும் இருந்து பலரும் பாராட்டி வருகின்றனர். அதன்படி முதல்வர் ஸ்டாலினும் சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினா அணியைப் பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “என்ன ஒரு அற்புதமான சுவாரஸ்யமான போட்டி! கடைசி வரை வீழ்ந்துவிடக் கூடாது என்று நினைத்த பிரான்ஸ்.. எம்பாப்பேவின் அசத்தல் ஹாட்ரிக் இந்தப் போட்டியை உலகக் கோப்பையின் சிறந்த இறுதிப் போட்டிகளில் ஒன்றாக மாற்றிவிட்டது. கால்பந்து உலகக் கோப்பை வென்ற அர்ஜென்டினா மற்றும் மெஸ்ஸிக்கு வாழ்த்துகள்.. மார்டினெஸை நிச்சயம் தனியாகப் பாராட்டியே தீர வேண்டும்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.