ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ பற்றிய ஆவணப்படம், அடுத்த தலைமுறைக்கு பாடமாக அமைந்து உள்ளது என, தி.மு.க., துணை பொதுச் செயலர் கனிமொழி எம்.பி., பேசினார்.
‘மாமனிதன் வைகோ’ ஆவணப்படம், சென்னை உதயம் தியேட்டரில், நேற்று கனிமொழி முன்னிலையில் வெளியிடப்பட்டது. அமைச்சர் மா.சுப்பிரமணியன், ம.தி.மு.க., தலைமை செயலர் துரை வைகோ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விழாவில் கனிமொழி பேசியதாவது:-
வைகோவின் ஆவணப்படம், சென்னையில் முதன் முதலாக, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் வெளியிடப்பட்டது. கொரோனா ஊரடங்கு காலத்தில், வெளிநாட்டில் தங்கியிருந்த துரை வைகோ, இந்த ஆவணப்படம் உருவாக்கி உள்ளார். வைகோவின் பேச்சை கருணாநிதி பாராட்டி ரசிப்பார். ‘பொடா’ சட்டத்தில் வைகோ கைதாகி, வேலுார் சிறையில் இருந்தபோது, நீதிமன்ற அனுமதி பெற்று, சிறைக்கு சென்று, அவரை, கருணாநிதி சந்தித்தார். தமிழகத்தின் உரிமைக்காக, உலக தமிழர்களை பாதுகாக்க, வைகோ போராடி வருகிறார். அவரது ஆவணப்படம், ஒரு மனிதன் எப்படி உழைக்க வேண்டும்; எப்படிப்பட்ட அரசியல்வாதியாக இருக்க வேண்டும் என்பதற்கு, அடுத்த தலைமுறைக்கும் பாடமாக அமைந்துள்ளது. இவ்வாறு கனிமொழி பேசினார்.