சென்னையில் நடைபெற்ற பேராசிரியர் க. அன்பழகன் நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட விசிக தலைவர் திருமாவளவன், பேராசிரியர் க. அன்பழகன் குறித்து புகழ்ந்து பேசினார்.
திமுக பொதுச்செயலாளராக இருந்த மறைந்த பேராசிரியர் க. அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழாவைத் தமிழகம் முழுவதும் திமுக நடத்தி வருகிறது. மாநிலம் முழுக்க 100 பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நேற்று நடந்த பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் எம்பி பேசியதாவது:-
பேராசிரியர் அன்பழகன் பொன்விழா இதே பெரியார் திடலில் தான் நடந்தது. அப்போது பேராசிரியர் அன்பழகன் கட்சி மாறப் போவதாக வதந்தி பரவியிருந்தது. அதற்கு அப்போது நிதானமாகப் பதில் கொடுத்தார் அன்பழகன். அரசியல் அரங்கில் அவரை போல முதிர்ச்சியும் பக்குவமும் அடைந்த ஒரு தலைவரை நம்மால் பார்க்க முடியாது. அவர் கட்சியில் இருந்து விலகுவதாக வதந்தி பரவிய சமயத்தில் சொன்னார். என்னை விட 1.5 வயது குறைவாக உள்ள கருணாநிதியை நான் தலைவராக ஏற்றுள்ளேன் என்றால் அதற்குக் காரணம் கருணாநிதியை விட்டால் இந்த தமிழினத்தைக் காக்க வேறு யாரும் இல்லை என்பது தான். கருணாநிதியைப் போல யாராலும் உழைக்க முடியாது. அவரது அர்ப்பணிப்பும் வேலையும் இந்த மொழிக்கும் இனத்திற்கு வரலாற்றுத் தேவையாக உள்ளது. எனவே தான் அண்ணாவைத் தலைவராக ஏற்றுக் கொண்ட நான்.. கருணாநிதியைத் தலைவராக ஏற்றுக் கொண்டு செயல்படுகிறேன்.. நான் கட்சி மாறுவது என்பது எப்போதும் நடக்காது என்று உறுதியாகச் சொன்னார்.
அவரது பேச்சை எப்போதும் ரசித்துக் கொண்டே இருக்கலாம்.. தன்னை பற்றிச் சொல்லும் போது முதலில் நான் மனிதன். இரண்டாவது நான் க.அன்பழகன்.. 3ஆவது நான் சுயமரியாதைக்காரன். 4ஆவது நான் அண்ணாவின் தம்பி.. 5ஆவது நான் கருணாநிதியின் தோழன் என்றவர் அவர்.. நான் மனிதன் என்று முதலில் சொன்ன போதே அவர் பெரியாரியத்தை எந்தளவுக்கு உள்வாங்கியுள்ளார் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.. சாதி, மத அடையாளங்களை முன்னிறுத்தும் போது, மனிதன் எனச் சொன்னவர் அவர்.. அன்பழகனின் தந்தை காங்கிரஸை சேர்ந்தவர் என்றாலும் அவர் பெரியாருடன் இணைந்து பணியாற்றியவர்..
அவர் வயது முதிர்ந்து இருந்த போது அவரை ஒரு முறை நேரில் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தோம்.. அப்போதும் தமிழினத்தைக் காக்கத் தகுதி படைத்தவர் கருணாநிதி என்றவர் அன்பழகன்.. நான் அறிந்த வரை இந்திய அரசியலில் கருணாநிதி- அன்பழகன் போன்ற ஒரு நட்பைப் பார்க்க முடியாது.. களங்கமில்லாத நட்பு, கறைபடியாத நட்பு.. எதிர்பார்ப்பு இல்லாத நட்பு.. எந்தவொரு வருத்தம் இல்லாத நட்பு.. சிறந்த தளபதி கருணாநிதிக்குக் கிடைத்த மிகச் சிறந்த ஒரு தளபதி பேராசிரியர் அன்பழகன்.. கருணாநிதிக்கு எதிராகக் கடுமையான அவதூறுகள், விமர்சனங்கள் வந்த போதெல்லாம் முன்னின்றவர் அன்பழகன். கருணாநிதிக்கு எதிராக ஒரு சொல்லையும் கடைசி வரை சொன்னதில்லை. அப்படியொரு நட்பு அரசியலில் நாம் எப்போதும் பார்க்க முடியாது. அவர் ஒரு சுயமரியாதைக்காரர். பெரியாரின் பிள்ளையாக அரசியல் களத்தில் பணியாற்றினார் அண்ணாவின் தம்பியாகக் கருணாநிதியின் நண்பராகத் தனது இறுதி மூச்சு வரை நின்று திராவிட இயக்கத்தைக் காக்க அரணாக இருந்தார். அவர் இல்லாமல் இருந்திருந்தால் கருணாநிதி பெரிய நெருக்கடியைச் சந்தித்திருப்பார். கருணாநிதிக்கு நம்பிக்கைக்குரிய ஒருவராக இருந்தார் அன்பழகன். கடைசி வரை நம்பிக்கைக்குரிய ஒருவராகவே இருந்தார். அவர் பல புத்தகங்களை எழுதியுள்ளார். பேசியுள்ளார். ஆனால், அதைத் தாண்டி அரசியல் அரங்கில் அவர் நேர்மையாகவே இருந்தார்.
இன்று திமுக தலைவராக ஸ்டாலின் வந்துள்ளார். கருணாநிதியின் பிள்ளை என்பதால் மட்டுமே அவர் இந்த இடத்திற்கு வந்துவிடவில்லை. கருணாநிதியின் எல்லா பிள்ளைகளும் இந்த இடத்திற்கு வர முடியவில்லை. ஸ்டாலினுக்கு அதற்கான தகுதி இருந்தது. அவர் அதற்காக உழைத்தார். ஸ்டாலின் சந்தித்த நெருக்கடி அதிகம். படிப்படியாக உயர்ந்து இந்த இடத்திற்கு வந்துள்ளார். அண்ணாவுடன் இந்த இயக்கம் முடிந்தது என்றவர்களுக்குக் கருணாநிதி வந்தார். 50 ஆண்டுகள் இயக்கத்தைச் சிறப்பாக நடத்தினார். கருணாநிதி இந்த இயக்கம் முடிந்தது என்றவர்களுக்கு இந்த இயக்கத்தைக் காக்க நான் இருக்கிறேன் என்றவர் ஸ்டாலின். அவரை முதலில் அடையாளம் காட்டியவர் அன்பழகன் தான்.
இன்று உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுத்ததை விமர்சிக்கிறார்கள். ஆனால், துரைமுருகன் பொதுச்செயலாளர் ஆகியுள்ளார். டி.ஆர்.பாலு பொருளாளராக உள்ளார். அவர் எல்லாம் கருணாநிதியின் குடும்பத்தினரா? திமுகவில் ஜனநாயக முறையில் தான் பொறுப்புகள் தேர்வு செய்யப்படுகிறது. விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவரான போது, திமுக 3ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டது. இதை இப்போது முதல் இடத்திற்குக் கொண்டு வந்தவர் ஸ்டாலின். ஆட்சி அதிகாரத்திற்கு எடுத்து வந்துள்ளார். ஆட்சியைக் காப்பாற்றுவதை விடக் கட்சியைக் காப்பது முக்கியம். திமுக என்கிற ஒரு சுயமரியாதை இயக்கம் இந்த மண்ணுக்குத் தேவை. சமூக நிதியைப் பாதுகாத்து சனாதனத்தை விரட்டியடிக்க திமுக என்ற அரண் தேவை. நான் பல முறை சொல்லியுள்ளேன். தமிழ்நாட்டை மட்டுமின்றி இந்தியாவைக் காக்க வேண்டிய பொறுப்பு ஸ்டாலினுக்கு இருக்கிறது. இந்திய அளவில் பயணித்து ஜனநாயக இயக்கத்தை ஒன்றிணைக்க வேண்டும்.. 2024 தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் பொறுப்பு ஸ்டாலினுக்கு தான் இருக்கிறது. தமிழ்நாட்டுடன் இந்தியாவையும் அரசியலமைப்பையும் காக்கும் பொறுப்பு ஸ்டாலினுக்கு இருக்கிறது. உங்களை உணர்ந்து புரிந்து தான் கருணாநிதியும் அன்பழகனும் அடையாளம் காட்டியுள்ளார்கள். உங்களுக்கு நான் துணை நிற்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.