நாடாளுமன்றத்தில் நமது அன்றாட நடவடிக்கைகளை பார்த்து 135 கோடி இந்திய மக்களும் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று, மாநிலங்களவைத் தலைவரும், துணைக் குடியரசுத் தலைவருமான ஜக்தீப் தன்கர் வேதனை தெரிவித்தார்.
ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடா யாத்திரையில் மல்லிகார்ஜுன கார்கே நேற்று கலந்து கொண்டார். அப்போது அவர், சீனா – இந்தியா மோதல் விவகாரத்தை முன்வைத்து பேசினார். இதுகுறித்து அவர் கூறுகையில், இன்று வரை நாடாளுமன்றத்தில் சீனா விவகாரம் குறித்து பேச எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி கிடைக்கவில்லை. சீனா – இந்தியா எல்லை பிரச்சினையை நாடாளுமன்றத்தில் விவாதிக்க மோடி பயப்படுகிறார். மக்கள் மத்தியில் பேசும் போது சிங்கம் போல தன்னை பாஜக அரசு காட்டிக்கொள்ளும். ஆனால், அதன் செயல்பாடுகளோ எலியை போல இருக்கும். இப்போது சீனா விவகாரத்திலும் மத்திய அரசின் நடவடிக்கை அப்படிதான் இருக்கிறது. தியாகத்துக்கு பெயர்போன கட்சி காங்கிரஸ். சுதந்திரத்துக்காக எத்தனையோ காங்கிரசார் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். ஆனால், பாஜகவினரின் நாய் கூட இந்த நாட்டுக்காக சாகவில்லை. ஆனால், அவர்கள் (பாஜக) தங்களை தாங்களே தேசபக்தர்கள் எனக் கூறிக் கொள்வார்கள். காங்கிரசை பார்த்து தேசவிரோதிகள் எனக் கூறுவார்கள். பாஜக எவ்வளவு முயன்றாலும், அவர்கள் உண்மையான தேசபக்தர்களாக மாற முடியாது என்பது மக்களுக்கு தெரியும்” என கார்கே பேசினார்.
இந்நிலையில், சுதந்திரப் போராட்டத்தில் பாஜகவினரின் ஒரு நாய் கூட சாகவில்லை என மல்லிகார்ஜுன கார்கே கூறியதை எழுப்பி, இன்று மாநிலங்களவையில் பாஜகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். மேலும், பாஜகவினர் குறித்து இழிவாக பேசிய மல்லிகார்ஜுன கார்கே பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். ஆனால், இதை ஏற்காத மல்லிகார்ஜுன கார்கே, “இந்த விமர்சனத்தை நான் நாடாளுமன்றத்திற்கு வெளியே வைத்தேன். எனவே, இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிப்பது சரியல்ல” என்றார். மேலும், எதற்காகவும் மன்னிப்பு கேட்கப்போவதில்லை என்றும் கார்கே கூறினார். இதையடுத்து, மல்லிகார்ஜுன கார்கேவை கண்டித்து பாஜகவினர் மாநிலங்களவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர். பாஜகவை கண்டித்து காங்கிரஸ் எம்.பி.க்களும் கோஷங்களை எழுப்பினர். இதனால் அவையில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
அப்போது பேசிய மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கர், “இங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது? மக்கள் பிரதிநிதிகளாகிய நீங்கள் சிறு பிள்ளைகளை போல கத்தி கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இதை பார்க்க மிகவும் வேதனையாக இருக்கிறது. ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள். நமது இந்த செயல்களை கண்டு 135 கோடி இந்தியர்களும் சிரித்துக் கொண்டிருப்பார்கள். நாம் எந்த அளவுக்கு தரம் தாழ்ந்துவிட்டோம் என அவர்கள் நினைப்பார்கள். நாம் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம்” என்றார். எனினும், அவரது பேச்சை கேட்காமல் மாநிலங்களவையில் எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.