ராஜஸ்தானில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியை எலியுடன் ஒப்பிட்டு பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மன்னிப்பு கேட்க வேண்டும் என ராஜ்யசபாவில் பா.ஜ.,வினர் குரல் எழுப்பினர். ஆனால், பார்லி.,க்கு வெளியே பேசியதற்கு இங்கு மன்னிப்பு கேட்க முடியாது என கார்கே திட்டவட்டமாக தெரிவித்தார்.
ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரை ராஜஸ்தானில் நடந்து வருகிறது. இதற்கிடையே அங்கு நேற்று, காங்கிரசின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற காங்., தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ‘நாங்கள் நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தோம், நாட்டின் ஒற்றுமைக்காக இந்திரா, ராஜிவ் உயிரை தியாகம் செய்தார்கள்.
எங்கள் கட்சி தலைவர்கள் நாட்டு ஒற்றுமைக்காக தங்கள் உயிரைக் கொடுத்தார்கள். நீங்கள் (பா.ஜ.,) என்ன செய்தீர்கள்? உங்கள் நாய்கள் எதுவும் நாட்டுக்காக இறந்ததா? குடும்ப உறுப்பினர்கள் யாராவது தியாகம் செய்திருக்கிறார்களா? இல்லை’ என பேசியிருந்தார்.
மேலும் அவர் பேசுகையில், ‘மோடி அரசாங்கம் தாங்கள் மிகவும் வலிமையானவர்கள் என்று கூறிக்கொண்டு, தங்களைத் தாங்களே தட்டிக்கொடுத்து கொள்கிறார்கள். இந்தியா-சீனா எல்லையில் சீனாவின் ஊடுருவலை மத்திய அரசு தடுக்க முடியாததால், பார்லி.,யில் விவாதம் நடத்தத் தயங்குகிறது. பிரதமர் வெளியில் சிங்கம் போல பேசுகிறார், ஆனால் உண்மையில், அவர் உள்ளே எலி போல் செயல்படுகிறார்’ எனவும் விமர்சித்திருந்தார்.
பிரதமர் மோடியை எலியுடன் ஒப்பிட்டு கார்கே பேசியதற்கு பா.ஜ.,வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவகாரம் இன்றைய பார்லி., குளிர்கால கூட்டத்தொடரில் எதிரொலித்தது. ராஜ்யசபாவில் பா.ஜ., எம்.பி.,க்கள் அனைவரும், மல்லிகார்ஜூன கார்கே மன்னிப்பு கேட்க வேண்டும் என குரல் கொடுத்தனர். இது தொடர்பாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பேசியதாவது:-
நேற்று மல்லிகார்ஜூன கார்கே அநாகரீகமாக பேசியுள்ளார். அவர் பயன்படுத்திய வார்த்தைகள் துரதிருஷ்டவசமானது. ஆதாரமற்ற விஷயங்களை பேசியதையும், பொய்களை தேசத்தின் முன்வைக்க அவர் முயற்சிப்பதையும் நான் கண்டிக்கிறேன். பார்லிமென்டில் நாட்டு மக்களிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். கார்கே தனது மனநிலை மற்றும் பொறாமையை வெளிப்படுத்தியுள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கு பதிலளித்த கார்கே, ‘பார்லி.,க்கு வெளியே ராஜஸ்தானின் அல்வாரில் நடந்த பாரத் ஜோடோ யாத்திரையின் போதுதான் நான் பேசினேன். அரசியல் ரீதியாக நான் பேசியது அவைக்கு வெளியே தான். இதற்கு நான் மன்னிப்பு கேட்க முடியாது. எனவே அது பற்றி இங்கு விவாதிக்க வேண்டிய அவசியமில்லை. இரண்டாவதாக, சுதந்திரப் போராட்டத்தில் அவர்களுக்குப் பங்கு இல்லை என்று என்னால் இன்னும் சொல்ல முடியும். நான் மீண்டும் கூறுகிறேன், சுதந்திரம் பெற்றதில் பாஜகவுக்கு எந்த பங்கும் இல்லை. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி போன்று நாட்டின் ஒற்றுமைக்காக உங்களில் யார் நாட்டிற்காக உயிரிழந்தார்கள்? எனத் தெரிவித்தார்.