ராகுல் நடைப்பயணத்தால் பாஜகவும் மோடியும் பயப்படுகிறார்கள்: அசோக் கெலாட்

ராகுல் தலைமையில் நடைபெற்று வரும் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் பெற்று வரும் ஆதரவால், பாஜகவும், மோடி அரசும் அச்சம் அடைந்துள்ளனர் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

ஒற்றுமை நடைப்பயணம் அடைந்து வரும் புகழால் பாஜக அச்சமடைந்துள்ளதால், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ராகுல் காந்திக்கு, நடைப்பயணத்தின்போது கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றுமாறு கடிதம் எழுதியிருக்கிறார். தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து அசோக் கெலாட் கூறுகையில், ராஜஸ்தானில் நடைபெற்ற நடைப்பயணம் இன்று காலையுடன் நிறைவு பெறுகிறது. ஆனால், பாஜகவும் மத்திய அரசும் அதிகமான மக்கள் கூடுவதால் அச்சம் அடைந்து ராகுல் காந்திக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார்கள். மக்கள் மத்தியில் ஒற்றுமை நடைப்பயணத்துக்குக் கிடைத்திருக்கும் ஆதரவு காரணமாகவே, அதற்கு குந்தகம் விளைவிப்பதற்காக பாஜக இவ்வாறு செய்திருப்பது தெளிவாகத் தெரிகிறது என்றும் அவர் கூறுகிறார்.

2 நாள்களுக்கு முன்பு, திரிபுராவில் பிரதமர் மோடி நடத்திய பேரணியில் கொரோனா கட்டுப்பாடுகள் பின்பற்றப்படவில்லையே. இரண்டாவது அலையின்போது கூட மேற்கு வங்கத்தில் மோடி மிகப்பெரிய பேரணிகளை நடத்தினாரே? ஒரு வேளை நாட்டின் மீதுதான் உண்மையான அக்கறை இருக்குமானால் சுகாதாரத் துறை அமைச்சர் பிரதமருக்கு அல்லவா முதல் கடிதத்தை அனுப்பியிருக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.