அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மருத்துவமனையில் திடீரென சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் பயப்படும்படியாக ஒன்றும் இல்லை என அவரது ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.
அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்ந்து நெருக்கடி அளித்து வரும் ஓபன்னீர்செல்வம் இன்று போடி மாவட்ட செயலாளர் கூட்டத்தை கூட்டியிருக்கிறார். இதனால் அதிமுக விவகாரம் தொடர்பாக கூடுதல் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. இந்த கூட்டத்திற்கு பின்னர் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் போட்டி பொதுக்குழு நடத்துவதற்காகவும் ஆலோசனைகள் நடத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன அதே நேரத்தில் எடப்பாடி தரப்பு இந்தக் கூட்டத்தை ஒரு பொருட்டாகவே கருதிக் கொள்ளவில்லை.
இந்நிலையில் இன்று எடப்பாடி தரப்புக்கு ஆதரவான நாள் என்று தான் கூற வேண்டும். காரணம் அதிமுகவின் வரவு செலவு கணக்கை பழனிசாமி சமர்ப்பித்த நிலையில் அதை தலைமை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது. கடந்த செப்டம்பர் 29ம் தேதியே தேர்தல் ஆணையத்திற்கு இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி ஆவணங்களை அனுப்பியிருந்த நிலையில், அதனை ஏற்ற தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. கட்சியின் வருமான வரி கணக்கும் பழனிசாமி பெயரிலேயே செலுத்தப்பட்டு அதன் நகலும் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதோடு, அனைத்து ஆவணங்களும் இடைக்கால பொது செயலாளர் என குறிப்பிடப்பட்டு இருந்த நிலையில் அவை அப்படியே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதனால் அதிமுக இனி தங்கள் கையில் தான் இருக்கிறது என உற்சாகமாகக் கூறி வருகின்றனர். அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை தேர்தல் ஆணையம் தான் இறுதி முடிவெடுக்கும் நிலையில் இந்த நகர்வு எடப்பாடி தரப்பை பலத்த உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மருத்துவமனையில் திடீரென சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். கடந்த சட்டமன்றத் தேர்தல் தொடங்கி பல மாதங்கள் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதனால் கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் கொரோனா தொற்று இல்லை என்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து வயிற்று வலி காரணமாக அவர் அவதிப்பட்ட நிலையில் பரிசோதனையில் அவருக்கு ஹெர்னியா என்ற குடலிறக்க பிரச்சனை இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து மருத்துவர்கள் அவருக்கு குடலிறக்க அறுவை சிகிச்சை செய்தனர். இதை அடுத்து சிறிது காலம் ஓய்வெடுத்த எடப்பாடி மீண்டும் தீவிர அரசியலுக்கு திரும்பினார்.
இந்த நிலையில் அடிக்கடி அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் கடந்த அக்டோபர் மாதம் எண்டோஸ்கோபி சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறை உடல் பரிசோதனை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று லேசான வயிற்று வலி ஏற்பட்டதால் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் எடப்பாடி பழனிச்சாமி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இன்று மாலையே அவர் வீடு திரும்புவார் எனவும் பயப்படும்படி ஒன்றும் இல்லை என அவரது ஆதரவாளர்கள் கூறியிருக்கின்றனர்.