மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத்தொகை விரைவில் வழங்கப்படும் என்றும் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார். தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. பாக்கி ரூ.1,200 கோடி மட்டுமே உள்ளது என்றும் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ரூ.17,176 கோடி ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத்தொகை விரைவில் வழங்கப்படும் என்றும் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஜி.எஸ்.டி. இழப்பீடு தொடர்பான கேள்விகளுக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மற்றும் இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி ஆகியோர் நேற்று பதிலளித்தனர். அதன்படி, கடந்த ஜூன் மாத நிலவரப்படி மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. இழப்பீடு ரூ.17,176 கோடி நிலுவையில் இருப்பதாக பங்கஜ் சவுத்ரி தெரிவித்தார்.
பின்னர் நிர்மலா சீதராமன் பேசும்போது, ‘தற்போதைய நிலவரப்படி, ஜூன் வரையிலான அனைத்து நிலுவைத் தொகைகளையும் ஓரளவு செலுத்திவிட்டதால், நிலுவையில் உள்ள ரூ.17,000 கோடியும் விரைவில் வழங்கப்பட உள்ளது. தமிழ்நாட்டிற்கு ஜூன் 2022-ல் நிலுவையில் உள்ள ஜி.எஸ்.டி இழப்பீடு விவரங்கள் ரூ.1200 கோடி மட்டுமே. மாநிலத்தின் பயன்பாட்டு சான்றிதழ் கிடைக்கப்பெறாததால் அதை நிலுவை என கருத முடியாது’ என தெரிவித்தார்.