சேகர் ரெட்டியின் வருங்கால மருமகனுக்கு மாரடைப்பு. சிகிச்சை பலனின்றி மரணம்!

பிரபல தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வருங்கால மருமகன் சந்திரமௌலி மாரடைப்பால் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 27.

திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரியாக உள்ளவர் தர்மா ரெட்டி. இவரது மகன் சந்திரமௌலி (27). இவருக்கும் சேகர் ரெட்டியின் மகளுக்கும் அண்மையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்களுக்கு அடுத்த ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த திருமணத்தை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நடத்துவதாக இருந்தது. இந்த நிலையில் சந்திரமௌலிக்கு கடந்த 18ஆம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருடைய நிலை கவலைக்கிடமாக இருந்ததாகவே சொல்லப்பட்டது. இந்த நிலையில் சந்திரமௌலிக்கு உயர்தர சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. எனினும் அவரது உடல் சிகிச்சைகளை ஏற்கவில்லை என சொல்லப்பட்டது.

இந்த நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் சந்திரமௌலி சிகிச்சை பலனின்றி இன்று காலை 8.20 மணிக்கு காலமானார். இது தொடர்பாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக இயக்குநர் தர்மா ரெட்டியின் மகன் சந்திரமௌலி ரெட்டிக்கு கடந்த 18 ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவக் குழுவினர் உயர் தர சிகிச்சைகளை மேற்கொண்ட நிலையில் சந்திரமௌலி இன்றைய தினம் காலை 8.20 மணிக்கு காலமானார். சந்திரமௌலி ஏற்கெனவே தனது கண்களை தானமாக கொடுப்பதாக பதிவு செய்திருந்தார். அதன்படி அவரது கண்களை தானமாக பெறுவதற்கான பணிகள் நடைபெறுகின்றன. சந்திரமௌலியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மணல் வியாபாரியான சேகர் ரெட்டி கடந்த 2016ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு தமிழகத்தில் மிகவும் பிரபலமடைந்தார். சேகர் ரெட்டி சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாாக சிபிஐ, வருமான வரித் துறை, அமலாக்கத் துறை சார்பாக வழக்குகள் பதியப்பட்டு ரெய்டு நடத்தப்பட்டது. அப்போது சேகர் ரெட்டியின் வீட்டில் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் டைரியில் குறிப்பிட்டுள்ள விவரங்களை வைத்து அதிமுகவின் மூத்த நிர்வாகிகளுக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், சி விஜயபாஸ்கர், வைத்திலிங்கம், முன்னாள் சபாநாயகர் தனபால், மாஜி அமைச்சர்கள் தங்கமணி, செல்லூர் ராஜூ, எம்பி சம்பத் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. அந்த டைரியில் சேகர் ரெட்டியுடன் யாரெல்லாம் பணப்பரிவர்த்தனையில் இருந்தார்கள், யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது, அவர்கள் அதிமுக ஆட்சியில் எந்த பொறுப்புகளில் இருந்தார்கள் உள்ளிட்டவை குறித்தெல்லாம் விவரங்கள் இருந்தன. இதனால் சேகர் ரெட்டியின் டைரி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. தொழிலதிபரான சேகர் ரெட்டி திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழ்நாடு- புதுவை மாநில ஆலோசனைக்குழு தலைவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.