சீனா மீது, ஏன் இதுவரை எந்த பொருளாதார நடவடிக்கையும் எடுக்கவில்லை: சோனியா காந்தி

இந்தியா – சீனா எல்லை மோதல் விவகாரத்தில் மத்திய பாஜக அரசு ஏன் சீனா மீது இதுவரை எந்த பொருளாதார நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சோனியா காந்தி கடுமையாக சாடி உள்ளார்

அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் தவாங் செக்டார் பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறல் குறித்து, நடப்பு நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த விவகாரத்தில் ஏற்கனவே மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அறிக்கை தாக்கல் செய்த நிலையில், எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை. இதனால், எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருவதால் நாடாளுமன்ற அலுவல்கள் பாதிக்கப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது. நாடாளுமன்றம் வளாகம் முன்பும் எதிர்க்கட்சிகள் எம்.பி.,க்கள் சோனியா காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி.,க்கள் குழு கூட்டம் டெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில்
அக்கட்சியின் லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.,க்கள் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், சோனியா காந்தி பேசியதாவது:-

சீனா தொடர்ந்து அத்துமீறி வருவது ஏன்? அந்நாட்டை எதிர்கொள்ள மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன ? எதிர் காலங்களில் என்ன செய்ய உள்ளது? எதிர்காலத்தில் இந்தியாவிற்குள் சீன வீரர்கள் ஊடுருவுவதை தடுக்க மத்திய அரசு என்ன செய்துள்ளது? சீனாவுடன் வர்த்தகப் பற்றாக்குறை உள்ள நிலையில், அந்நாட்டிற்கு ஏற்றுமதி அளவை விட அதிகளவு இறக்குமதி செய்யப்படுகிறது. சீனாவின் ராணுவ நடவடிக்கைக்கு எதிராக, ஏன் பொருளாதார ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சர்வதேச சமுதாயத்துடன், அரசின் தூதரக ரீதியில் எடுத்த நடவடிக்கை என்ன? தேச நலன் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளில் அரசு விவாதத்திற்கு அனுமதிக்க மறுப்பது என்பது, ஜனநாயகத்திற்கு இழைக்கப்படும் அவமரியாதையாகும்.

அரசின் மோசமான நோக்கத்தை எதிரொலிக்கிறது. நாட்டை ஒருங்கிணைக்க முடியாதையும் காட்டுகிறது. இதற்கு மாறாக, குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிராக வெறுப்பு உணர்வை பரப்பும் கொள்கையில் ஈடுபடும் அரசு, வெளிநாட்டு அச்சுறுத்தலுக்கு எதிராக மக்கள் அனைவரையும் ஒன்றாக நிற்க செய்வதை கடினமாக்கி உள்ளது. இது போன்ற பிரிவினை இன்னும் நம்மை பலவீனமாக்குகிறது. நாட்டை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குகிறது. தற்போதுள்ள சூழ்நிலையில், மக்கள் அனைவரையும் ஒற்றுமைப்படுத்துவது தான் அரசின் கடமையாக இருக்க வேண்டுமே தவிர, கடந்த காலங்களில் செய்தது போல், பிரித்து வைக்கக் கூடாது. துரதிர்ஷ்டவசமாக, மிகவும் முக்கியமான மற்றும் கவலைக்குரிய விஷயங்களில் மவுனம் காப்பது என்பது அரசின் எதிர்காலத்தை எடுத்து காட்டுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.