மூக்கில் செலுத்தக் கூடிய கொரோனா மருந்துக்கு மத்திய அரசு அனுமதி!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்த அச்சம் அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு மூக்கின் வழியே செலுத்தக்கூடிய பூஸ்டர் டோஸுக்கு அனுமதி அளித்துள்ளது.

கொரோனாவில் இருந்து நாம் மெல்ல விடுபட்டு இயல்பு நிலைக்குத் திரும்பி வந்த சூழலில், கொரோனா வைரஸ் குறித்த அச்சம் இப்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சீனாவில் கொரோனா பாதிப்பு திடீரென வேகமாக அதிகரித்தே இதற்குக் காரணம். அங்கு இப்போது தினசரி 10 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. அங்கு அமலில் இருந்த கொரோனா கட்டுப்பாடுகள் திடீரென விலக்கிக் கொள்ளப்பட்டதே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. சீனாவில் இந்தளவுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், இது உலகெங்கும் ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அங்குக் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனாவும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவிலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் தொடங்கியுள்ளன. பிரமதர் நரேந்திர மோடி நேற்றைய தினம் இது தொடர்பாகச் சுகாதார வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினார். மேலும், அனைவரும் பொது இடங்களுக்கு வரும் போது கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் அறிவித்தார். பூஸ்டர் டோஸ் இதற்கிடையே இப்போது பூஸ்டர் டோஸ் பணிகளையும் தீவிரப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கொரோனா வேக்சினால் கிடைக்கும் தடுப்பாற்றல் என்பது குறிப்பிட்ட காலத்தில் மெல்லக் குறைந்துவிடும். இதன் காரணமாக பூஸ்டர் டோஸ் ரொம்பவே அத்தியாவசியமான ஒன்றாகிறது. இந்தியாவில் முதல் இரண்டு டோஸை போட ஆர்வம் காட்டிய மக்கள் பூஸ்டர் டோஸ் போடப் பெரியளவில் ஆர்வம் காட்டவில்லை. இந்தியாவில் சுமார் 28% பேர் மட்டுமே பூஸ்டர் டோஸ் போட்டுள்ளனர். அனைவரும் விரைவில் பூஸ்டர் டோஸ் போட்டுக் கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதற்கிடையே கொரோனா வேக்சின் பணிகளில் பாரத் பயோடெக் நாசி தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த வேக்சினை எடுத்துக் கொள்ள ஊசி தேவையில்லை. இதை நேரடியாக மூக்கின் வழியே நம்மால் செலுத்த முடியும். இந்த வேக்சின் இன்று முதலே கொரோனா வேக்சின் பணிகளுக்காக உருவாக்கப்பட்ட கோவின் தளத்தில் சேர்க்கப்படும் என்று அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார். இந்த வேக்சின் பூஸ்டர் வேக்சினாக செயல்படும் என கூறப்பட்டுள்ளது. இன்று முதல் தனியார் மருத்துவமனைகளில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ள மூக்கு வழியே செலுத்தக்கூடிய இந்த வேக்சின், இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட முதல் பூஸ்டர் டோஸ் ஆகும். இது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அளிக்கப்படும். இந்த வேக்சின் விலை குறித்து விரைவில் முடிவு செய்யப்பட உள்ளது. விரைவில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வரவுள்ள நிலையில், அனைவரும் விரைவில் பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.